விளையாட்டு

இந்திய ஒருநாள் அணிக்குத்தான் இழப்பு: ராயுடுவை 2019 உ.கோப்பை அணியில் சேர்க்காதது பற்றி ஷேன் வாட்சன் கருத்து

செய்திப்பிரிவு

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அம்பதி ராயுடுவை இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யாமல் விட்டது இந்திய அணிக்குத்தான் நஷ்டம் என்று சிஎஸ்கேவின் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் அபாராமாக ஆடி வருகிறார் ராயுடு, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளிலும் அவர் சொதப்பியதாக நினைவில் இல்லை. வாய்ப்பு கொடுக்கலாம் என்பது போல்தான் ஆடிவந்தார்.

இந்நிலையில் விராட் கோலி 4ம் இடத்துக்கு ராயுடுவை விட்டால் யார் என்று கேட்டு விட்டு கடைசியில் ராயுடுவை உட்கார வைத்தார். இது அப்போது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது, தனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக ராயுடுவும் உணர்ந்தார்.

முதல் ஐபிஎல் போட்டியில் பும்ராவை அன்று சிறப்பாக ஆடினார், ஒரு டென்னிஸ் அடி பவுண்டரியும் அதில் அடங்கும். 48 பந்துகளில் 71 ரன்கள் விளாசி இவரும் டுபிளெசியும் சேர்ந்து சிஎஸ்கே அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

இந்நிலையில் சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் கூறியதாவது, “71 ரன்களுக்கு ராயுடு அபாரமாக ஆடினார். அவர் நம்பமுடியாத அளவுக்கு திறன் கொண்ட பேட்ஸ்மென். 2019 உலகக்கோப்பை அணியில் அவரைத் தேர்வு செய்யாதது இந்தியாவுக்குத்தான் நஷ்டம்.

அதுவும் பும்ராவை அவர் ஆடிய விதம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது, மைதானத்தின் அனைத்து இடங்களிலும் பந்தை அடிக்கக் கூடியவர் ராயுடு. தன் பழைய அணியான மும்பைக்கு எதிராக சில விஷயங்களை அவர் நிரூபிக்க வேண்டியும் இருந்தது” என்றார் ஷேன் வாட்சன்.

SCROLL FOR NEXT