தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரேயொரு பயிற்சி டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய ஏ அணியில் ஐபிஎல் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி டெல்லியில் உள்ள பாலம் மைதானத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது. 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தாலும், கேப்டன் யார் என்பது குறித்த எந்த அறிவிப்பையும் சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினர் வெளியிடவில்லை.
இந்திய அணியில் யஜுவேந்திர சாஹல் (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்), பவன் நெகி (சென்னை சூப்பர் கிங்ஸ்), கடந்த ஐபிஎல் கிரிக்கெட்டின் கண்டுபிடிப்பான ஹர்திக் பாண்டியா (மும்பை இண்டியன்ஸ்) ஆகிய 3 புதுமுக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
23 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சூர்யகுமார் யாதவ், மயங்க் அகர்வால் ஆகியோரும் ஏ அணியில் இடம்பெற்றுள்ளனர். அதேநேரத்தில் மனன் வோரா, கடந்த ஐபிஎல் போட்டி மற்றும் உள்ளூர் போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்காதபோதும் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். மனன் வோரா, கடைசியாக விளையாடிய 10 டி20 போட்டிகளில் ஒன்றில்கூட 40 ரன்களைக் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அணி விவரம்: மயங்க் அகர்வால், மனன் வோரா, மணீஷ் பாண்டே, மன்தீப் சிங், சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹார்டிக் பாண்டியா, ரிஷி தவன், அனுரீத் சிங், யஜுவேந்திர சாஹல், பவன் நெகி, குல்தீப் யாதவ்.