கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றுக்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் டி.சி.மேத்யூ கூறியதாவது: கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் சச்சின் பெயரில் ஒரு பெவிலியன் உள்ளது. இருப்பினும் அவர் பெயரை ஏதாவது ஒரு மைதானத்துக்கு சூட்டுவது என முடிவு செய்துள்ளோம். எந்த மைதானத்துக்கு அவருடைய பெயரை சூட்டுவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
ஏனெனில் வயநாட்டில் புதிதாக ஒரு கிரிக்கெட் மைதானத்தை திறந்துள்ளோம். மேலும் சில மைதானங்களின் கட்டுமானப் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. எனவே இது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும். சச்சினிடமும் இது குறித்து கலந்தாலோசிக்கப்படும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சச்சினுடன் இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். கேரளாவில் 14 மாவட்டங்களிலும் நவீன கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது. அந்த மைதானங்களுடன் பல்வேறு விளையாட்டு வசதிகள் அடங்கிய மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். மற்ற விளையாட்டுகளைச் சேர்ந்த புதிய தலைமுறை வீரர்களுக்கும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்றார்.