விளையாட்டு

அமெரிக்க ஓபன்: ஷரபோவா விலகல்

பிடிஐ

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா விலகியுள்ளார்.

போட்டித் தரவரிசையல் 3-வது இடத்தில் இருந்த அவர், வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் தகுதிச்சுற்றில் தோல்வி கண்ட மற்றொரு ரஷ்ய வீராங்கனையான டேரியா கேஸட்கினாவுக்கு பிரதான சுற்றில் ஆடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என போட்டி இயக்குனர் டேவிட் பிரெவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஓபன் போட்டியிலிருந்து விலகியது குறித்து டுவிட்டரில் ஷரபோவா கூறியிருப்பதாவது: துரதிருஷ்டவசமாக இந்த முறை அமெரிக்க ஓபனில் என்னால் பங்கேற்க முடியவில்லை. போட்டியில் பங்கேற்பதற்கு என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால் போதுமான காலஅவகாசம் கிடைக்கவில்லை. அடுத்த சில வாரங்களில் தொடங்கவுள்ள சீன ஓபனில் ரசிகர்கள் அனைவரையும் சந்திக்கிறேன். அதில் சிறப்பாக ஆடி இந்த ஆண்டை வெற்றியோடு முடிக்க விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும், மரியா ஷரபோவாவும் சந்திக்கும் வாய்ப் பிருந்தது. ஆனால் இப்போது ஷரபோவா விலகிவிட்டதால் அரையிறுதியில் செரீனாவும், செர்பியாவின் அனா இவானோ விச்சும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT