1999-ம் ஆண்டு தான் பயிற்சியாளர் பொறுப்பை உதறியதற்குக் காரணம் சில வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட ஊழல்களில் ஈடுபட்டு வேண்டுமென்றே சரியாக ஆடாததே என்று ஜாவேத் மியாண்டட் தெரிவித்துள்ளார்.
"நான் இது பற்றி அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கலீத் மெஹ்மூதிடம் தெரிவித்தேன், உடனே நடவடிக்கை எடுங்கள் இல்லையேல் சரிசெய்ய முடியாத அளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சீரழிந்து விடும் என்றேன். பயிற்சியாளராகத் தொடர எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை, இதனால் பதவியை உதறினேன்.
1999-ம் ஆண்டில் சூதாட்ட அச்சுறுத்தல் பாகிஸ்தான் கிரிக்கெட் வேர்களை பலவீனமாக்கியது” என்றார்.
1999 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக வீரர்களுக்கும், பயிற்சியாளர் ஜாவேதுக்கும் இடையே கடும் வாக்குவாதங்களும் மோதல்களும் ஏற்பட்டன. அதாவது வேண்டுமென்றே தங்கள் மீது சூதாட்ட புகாரை மியாண்டட் சுமத்துகிறார் என்று மூத்த வீரர்கள் அவரது பயிற்சியின் கீழ் ஆட எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஷார்ஜாவில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரை முன்வைத்து இந்த கருத்து வேறுபாடுகள் தோன்றின.
இந்நிலையில் கலீத் மெஹ்மூத் கடந்த வாரம் ஜாவேத் பற்றி கூறும்போது, அணித் தேர்வுகளில் கூடுதல் அதிகாரம் கேட்டார் அதனால் அவரை மாற்ற முடிவெடுக்கப்பட்டது என்றார்.
இது பற்றி ஜாவேத் மியாண்டட் கூறும்போது, “அவர் கூறியதில் உண்மையில்லை. சில வீரர்கள் ஆட்டத்தின் முடிவை வேண்டுமென்றே மாற்றுகின்றனர் என்று அவரை எச்சரித்தேன். ஆனால் அவர் என்னை நம்பவில்லை, இன்று பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு சூதாட்டத்தினால் நேர்ந்த கதியை நாம் பார்த்து வருகிறோம்” என்றார்.
மேலும், “சில ஆண்டுகளுக்குப் பிறகு சயீத் அன்வர் தனிப்பட்ட முறையில், எனக்கு எதிரான போக்குகளில் பங்கு பெற்றதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டதோடு, மூத்த வீரர்கள் இளம் வீரர்களை தூண்டி விடுவதாகவும் தெரிவித்தார்.
பிறகே, உலகக் கோப்பையில் நான் குற்றம்சாட்டிய அதே வீரர்களால்தான் வங்கதேசத்துக்கு எதிராக அதிர்ச்சித் தோல்வி ஏற்பட்டதும், மோசமான இறுதிப் போட்டி அமைந்ததும் இன்று வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியுள்ளது” என்றார் மியாண்டட்