விளையாட்டு

ஐபிஎல்-ஐ நேசிக்கிறேன், இந்திய நட்புகளை அதிகம் நேசிக்கிறேன்; இந்தியாவுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்: கெவின் பீட்டர்சன் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

ஐபிஎல் என்றாலே ரசிகர்கள், சப்தம், இசை, நடனம் என்று கோலாகலத் திருவிழாதான், அது ஏற்கெனவே கிரிக்கெட் என்ற கறார் வரையரையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு பாலிவுட் நிகழ்ச்சி நிரல் என்ற தகுதிக்குச் சென்று விட்டது.

ஆனால் இவையெல்லாம் இல்லாமல் திடீரென அங்கு கறார் கிரிக்கெட் நடக்கவேண்டுமென்றால் எப்படி இருக்கும். அதைத்தான் கரோனா வைரஸ் செய்து விட்டது.

முழுக்க முழுக்க ஸ்பான்சர்கள் நலன்களுக்காகவும் ஒளிபரப்பு நிறுவனங்கள் நஷ்டமடையக் கூடாது என்றும், பிசிசிஐ தன் வருவாயை இழக்கக் கூடாது என்பதற்காகவும் கரோனா ஆபத்து நீங்காத வேளையிலும் பயோ-செக்யூர் குமிழியில் வீரர்கள் இருந்தேயாக வேண்டிய கட்டாயத்தில் ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரரும் முன்னாள் ஐபிஎல் வீரருமான அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் கூறியதாவது:

நிச்சயமாக இந்த ஐபிஎல் வித்தியாசமானதுதான். அனைவரும் பயோ செக்யூர் கரோனா தடுப்புக் குமிழிக்குள் இருக்க வேண்டியதுதான், இந்த வாழ்க்கைக்கு தகவமைத்துக் கொள்ளும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு.

அனைவருக்குமே இது புதிதான ஒரு பிரதேசம்.

எந்த அணி ஜெயிக்கும் என்று என்னால் கூற முடியாது, ஆனால் என் இதயம் டெல்லி கேப்பிடல்ஸ் என்று கூறுகிறது. முதல் 2 வாரங்களுக்கு அணிகளை நெருக்கமாக அவதானித்த பிறகே என்னால் எந்த அணி வெற்றி பெறும் என்று கூற முடியும்.

எனக்கு அனைத்து வீரர்களையும் பிடிக்கும், ரிஸ்க் எடுக்கும் வீரர்களை அதிகம் பிடிக்கும்.

ஐபிஎல்-ஐ நேசிக்கிறேன், இந்தியா எனக்கு அளித்த அனைத்தையும் நான் நேசிக்கிறேன். 2002லிருந்து ஐபிஎல் பயணத்தை நேசிக்கிறேன். இந்தியப் பண்பாட்டை என்னை நேசிக்க வைத்தது என் அதிர்ஷ்டமே. அதே போல் இந்திய நட்புகள் என்னை நெகிழச் செய்துள்ளன. நிதியளவில் பெரிய அளவில் பயனடைந்தேன். உணர்வு ரீதியாகப் பயனடைந்தேன். இந்தியாவுக்கு நான் நிறைய கடன் பட்டிருக்குறேன்.

இவ்வாறு கெவின் பீட்டர்சன் நேஷனல் ஜியாகரபி சேனலின் ஆவணப்படமான இந்தியாவுக்கு கடவுளின் பரிசான ‘காண்டாமிருகத்தைக் காப்பாற்றுவோம்’ நிகழ்ச்சியின் போது தெரிவித்தார்.

SCROLL FOR NEXT