விராட் கோலி : கோப்புப்படம் 
விளையாட்டு

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஸ்திரமாக நிற்கும் கோலி; பேர்ஸ்டோ திடீர் முன்னேற்றம்

பிடிஐ


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அசைக்க முடியாமல் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்கள்.

இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ டாப் 10வரிசைக்குள் நுழைந்துள்ளார். ஆஸிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததையடுத்து, பேர்ஸ்டோ தரவரிசையில் முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 871 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 855 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

3 முதல் 5-ம் இடம் வரையில் முறையே பாபர் ஆசம், ராஸ் டெய்லர், டூப்பிளசிஸ் மாற்றமில்லாமல் நீடிக்கின்றனர். நியூஸி கேப்டன் கேன் வில்லியம்ஸன் 6-வது இடத்துக்கு 765 புள்ளிகளுடன் உயர்ந்துள்ளார்.

ஆரோன் பிஞ்ச், வார்னர் முறையை 7 மற்றும் 8-வது இடத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க வீரர் டீ காக் 9-வது இடத்திலும் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ 10-வது இடத்திலும் உள்ளார்.

இதில் ஆஸிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் 126 பந்துகளில் 112 ரன்களை பேர்ஸ்டோ குவித்ததையடுத்து, டாப்10 வரிசையில் நுழைந்துள்ளார். இதற்கு முன் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-வது இடம்வரை பேர்ஸ்டோ உயர்ந்ததுதான் அதிகபட்சமாகும். இப்போது 754 புள்ளிகளுடன் 10-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

ஆஸி.வீரர் மேக்ஸ்வெல்,அலெக்ஸ் காரேவும் தரவரிசையில் உயர்ந்துள்ளனர். மேக்ஸ்வெல் 5-இடங்கள் முன்னேறி 26-வது இடத்திலும், காரே 11 இடங்கள் முன்னேறி 28-வது இடத்துக்கும் நகர்ந்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், 3இடங்கள் முன்னேறி 4-வது இடத்துக்கு தனது கிரிக்கெட் வாழ்வின் சிறப்பான நிலைக்கு உயர்ந்துள்ளார்.

நியூஸிலாந்து வீரர் டிரன்ட் போல்ட் முதலிடத்திலும், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் வோக்ஸ் 2-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார். சக அணி வீரரான பென் ஸ்டோக்ஸ்4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 301 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

பந்துவீச்சாளர்களில் ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ் முதல்முறையாக டாப்10 வரிசையில் நுழைந்து 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். 15-வது இடத்திலிருந்து 6-வது இடத்துக்கு பாட் கம்மின்ஸ் உயர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT