விளையாட்டு

தரவரிசையில் மீண்டும் டாப் - 25: குருசாய் தத் நம்பிக்கை

பிடிஐ

இந்த ஆண்டின் இறுதிக்குள் சர்வதேச தரவரிசையில் மீண்டும் முதல் 25 இடத்துக்குள் வருவேன் என இந்திய பாட்மிண்டன் வீரர் குருசாய் தத் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தொடர் காயங்களால் அவதிப்பட்டு வந்த குருசாய் தத் மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்கவுள்ள நிலையில் அது தொடர்பாக மேலும் கூறியதாவது:

அடுத்தடுத்து காயங்கள் ஏற்பட்டன. வியட்நாம் ஓபனுக்குப் பிறகு தொடைப் பகுதியிலும் பின்னர் வலது காலிலும் காயம் ஏற்பட்டன. ஒவ்வொரு காயமும் குணமடைய குறைந்தபட்சம் 2 வாரங்கள் தேவைப்பட்டன. எனக்கு ஏற்பட்ட காயங்கள் அனைத்துமே சிறியவை என்றாலும், அது குணமடைய அதிக நாட்கள் தேவைப்பட்டன. எனது முதுகுப் பகுதியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆனால் இப்போது நன்றாக இருக்கிறேன் என்றார்.

உங்களின் தற்போதைய திட்டம் என்ன என்று குருசாய் தத்திடம் கேட்டபோது, “பல்கேரியாவில் நடைபெறவுள்ள சேலஞ்சர் மற்றும் கிராண்ட்ப்ரீ போட்டியிலும், அதைத்தொடர்ந்து நெதர்லாந்து ஓபனிலும் விளையாடவுள்ளேன். இதேபோல் பஹ்ரைன் போட்டியிலும் பங்கேற்கிறேன்.

ஹாங்காங் மற்றும் மக்காவ் ஓபனுக்கு முன்னதாக தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் முன்னேற வேண்டும் என்பதே என்னுடைய முதல் இலக்கு. இந்த ஆண்டின் இறுதிக்குள் முதல் 25 இடங்களுக்குள் வந்துவிட்டால் நன்றாக இருக்கும்” என்றார். குருசாய் தத் தற்போது 43-வது இடத்தில் உள்ளார்.

சாய் பிரணீத்

உடற்தகுதி பிரச்சினையிலிருந்து மீண்டுள்ள மற்றொரு இந்தியரான சாய் பிரணீத்தும் அடுத்து வரக்கூடிய போட்டிகளில் விளையாட தயாராக இருக்கிறார். அது தொடர்பாக அவர் கூறியதாவது:

பழையபடி நம்பிக்கையை அதிகரிப்பதற்காக ஏராளமான சேலஞ்சர் போட்டிகளில் விளையாடவிருக்கிறேன். கடந்த ஆண்டு காயம் ஏற்பட்டபோதும் அவ்வப்போது விளையாடி வந்தேன்.

ஆனால் இப்போது முழு உடற்தகுதியை பெற்றுவிட்டேன். எனவே அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெற விரும்புகிறேன். நெதர்லாந்து ஓபன், பிரான்ஸ் ஓபன், பிட்பர்கர் ஓபன் ஆகியவற்றில் விளையாடவுள்ளேன். அடுத்த மாதம் தொடர்ச்சியாக போட்டிகள் இருக்கின்றன என்றார்.

SCROLL FOR NEXT