டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-செக்.குடியரசு அணிகள் இடையிலான உலக குரூப் பிளே ஆப் சுற்று டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதில் செக்.குடியரசின் முன்னணி வீரரான தாமஸ் பெர்டிச் கலந்து கொள்ளவில்லை. இது இந்தியாவுக்கு சாதகமானதாகும்.
இந்தப் போட்டிக்கான டிரா (யாருடன் யார் மோதுவது என்பதை முடிவு செய்வது) டெல்லி யில் நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சோனோவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டிராவின்படி முதல் ஆட்டமான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் முதல் நிலை வீரரான யூகி பாம்ப்ரி, சர்வதேச தரவரிசையில் 85-வது இடத்தில் இருக்கும் செக்.குடியரசின் லூகாஸ் ரோஸலை சந்திக்கிறார். மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் இரண்டாம் நிலை வீரரான சோம்தேவ் (சர்வதேச தரவரிசை 164), செக்.குடியரசின் ஜிரி வெஸ்லேவை சந்திக்கிறார். வெஸ்லே, சர்வதேச தரவரிசையில் 40-வது இடத்தில் உள்ளார்.
இரண்டாவது நாளான நாளை நடைபெறவுள்ள இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பயஸ்-ரோஹன் போபண்ணா ஜோடி, செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபா னெக்-ஆடம் பாவ்லாசெக் ஜோடியை சந்திக்கிறது. மாற்று ஒற்றையர் பிரிவு ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறு கிறது.
போட்டி குறித்து யூகி பாம்ப்ரி கூறுகையில், “முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத் தித் தருவதோடு, செக்.குடியரசு அணிக்கு நெருக்கடி ஏற்படுத்த விரும்புகிறேன். முதல் ஆட்டம் என்பதால் எவ்வித நெருக்கடியு மின்றி ஆடுவேன்” என்றார்.
மிகக் கடினமான போட்டி
இந்திய அணியின் மூத்த வீரரும், முன்னணி வீரருமான லியாண் டர் பயஸ் கூறியதாவது: நாம் 1-0 என்று முன்னிலை பெற்றாலோ அல்லது 1-1 என சமநிலை பெற்றாலோ, அடுத்து நடைபெற வுள்ள இரட்டையர் ஆட்டம் மிக முக்கியமானதாகும். டேவிஸ் கோப்பை போட்டியில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியுடன் விளையாடவிருக்கி றோம். எனவே இதுவே மிகமிக கடினமான போட்டியாக இருக்கும்.
இந்தப் போட்டிக்காக யூகி பாம்ப்ரி, சோம்தேவ் ஆகி யோர் சிறப்பான முறையில் தயாராகியிருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக யூகி பாம்ப்ரி சிறப்பாக ஆடி வருகிறார். வெயில் நேரத்தில் விளையாடவிருக்கும் இந்தப் போட்டியை இந்திய வீரர்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதேநேரத்தில் ஒவ்வொரு வீரரும் தங்களின் இயல்பான பாணியில் போட்டிக்கு தயாராக வேண்டும். எனக்கு எந்த மாதிரி யான ஆட்டம் ஏதுவாக இருக்கிறது. சோம்தேவுக்கு எது சாதகமாக இருக்கிறது என்பதைப் பற்றி கவலையில்லை. வெயிலை சமாளிப்பதற்கும், தசைப்பிடிப்பு ஏற்படாமல் இருக்கவும் வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். டேவிஸ் கோப்பை போட்டி 5 செட்களை கொண்டது. அது அவ்வளவு எளிதானதல்ல. இதுதவிர வீரர்கள் தங்கள் உடம் பில் உள்ள நீர் பெரிய அளவில் வெளியேறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
சோம்தேவ்
வெஸ்லேவுக்கு எதிரான ஆட்டம் குறித்து சோம்தேவ் பேசுகையில், “வெஸ்லே டேவிஸ் கோப்பை போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் இதுவரை வெல்லவில்லை. அதற் காக அவரை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர் சர்வ தேச தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கிறார். அவரை அனுபவமற்ற வீரராக பார்க்கவில்லை. அவருக்கு எதிரான ஆட்டம் சவால் நிறைந்ததாக இருக்கும். அவர் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்” என்றார்.
இந்திய அணியின் கேப்டன் ஆனந்த் அமிர்தராஜ் கூறுகையில், “நாங்கள் எதிர்பார்த்தபடியே டிரா அமைந்திருக்கிறது. முதல் நாளில் நடைபெறவுள்ள 2 ஒற்றையர் ஆட்டங்களில் ஒன்றிலாவது இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும். 2-வது நாளில் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து பயஸ் அசத்தலாக ஆடி இந்தியா வுக்கு வெற்றி தேடித்தருவார் என நம்புகிறேன்” என்றார்.
நீங்கள் இந்திய உளவாளியா? ரடேக் கிண்டல்
செக்.குடியரசின் மூத்த வீரரான ரடேக் ஸ்டெபானெக் நேற்று முன்தினம் தனது 2-வது பயிற்சி போட்டியில் இருந்து விலகினார். அதற்கு வெயிலின் தாக்கம்தான் காரணமா என பத்திரிகையாளர் ஒருவர், ரடேக்கிடம் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த ரடேக், “நீங்கள் இந்திய உளவாளியா” என கிண்டலாக கூறினார்.
பின்னர் அது குறித்து விளக்கமாகப் பேசிய ஸ்டெபானெக், “நான் எந்தப் பயிற்சி போட்டியையும் தவிர்க்கவில்லை. திட்டமிட்டபடி பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நான் எனது அட்டவணையை பின்பற்றி வருகிறேன்” என்றார்.