விளையாட்டு

4-வது சுற்று வாய்ப்பை இழந்தார் நடால்: இத்தாலி வீரரிடம் அதிர்ச்சித் தோல்வி

ஏபி

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில், இத்தாலி வீரர் ஃபேபியோ ஃபாக்னீனியிடம் கடுமையாக போராடி 5 செட்கள் விளையாடி தோற்றார் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால்.

2 செட்கள் முன்னிலை பெற்ற பிறகு கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றை நடால் இழப்பது இதுவே முதல்முறை. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஆண்டில் எந்த ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டமும் இல்லாமல் செல்கிறார் ரபேல் நடால்.

மாறாக கடைசி வரை நடாலை எதிர்கொண்டு ஆட்கொண்ட பேபியோ பாக்னீனி, 3-6, 4-6, 6-4, 6-3, 6-4 என்ற செட்களில் கடினமாக உழைத்து வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நடாலுக்கு எதிராக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறிய பாக்னீனி, 5-வது செட்டிலும் அத்தகைய அணுகுமுறையைத் தொடர்ந்தார். இந்த செட் மட்டும் 52 நிமிடங்கள் நடைபெற்றது. 1-1 என்று இருவரும் அந்த கடைசி செட்டில் இருந்த பிறகு தொடர்ச்சியாக 7 முறை பிரேக் வாய்ப்புகள் ஏற்பட்டன. கடைசியில் நடாலை முறியடித்த பாக்னீனி 5-4 என்று முன்னிலை பெற்றார். பிறகு தனது சர்வை விட்டுக் கொடுக்காது ஆடி 6-4 என்று நடாலை வெளியேற்றினார்.

கடந்த 23 யு.எஸ்.ஓபன் போட்டிகளில் 22-ல் நடால் வெற்றி பெற்றுள்ளார்.

நடாலின் ஃபோர்ஹேண்ட் ஷாட்களில் அவரிடம் வழக்கமாகக் காணப்படும் 'டாப்ஸ்பின்' இல்லை. தரை ஷாட்களிலும் தாக்கம் எதுவும் இல்லை. எளிதில் எடுத்து விடக்கூடியதாக இருந்தது.

இது குறித்து நடாலே கூறும்போது, “என்னுடைய தவறுகள் சுலபமாக புரிகிறது, சுலபமாக விளக்கப்படக்கூடியது, ஆனால் சுலபமாக மாற்றிக் கொள்ளக்கூடியதல்ல. ஆனால் நான் மாற்றிக் காண்பிப்பேன்” என்றார்.

SCROLL FOR NEXT