விளையாட்டு

ரோஹித் சர்மாவை கடுமையாக விமர்சிக்க வேண்டிய தேவையில்லை: சஞ்சய் பாங்கர்

இரா.முத்துக்குமார்

டெஸ்ட் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா தேவையா என்ற அளவுக்கு அவர் மீது விமர்சனங்கள் பாய்ந்து வரும் நிலையில் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் ரோஹித் சர்மாவை இவ்வளவு கடுமையாக விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

காரணம், அவர் நிச்சயம் அணிக்கு நல்ல முறையில் பங்களிப்பு செய்து வருகிறார் என்றார் சஞ்சய் பாங்கர்.

ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்போ-வுக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி பாங்கர் கூறும்போது, “புள்ளி விவரங்களைப் பாருங்கள். அவர் 13 (14) டெஸ்ட் போட்டிகளில் ஆடி 800 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார், சராசரி 40 ரன்களுக்கு அருகில் உள்ளது. இதில் 2 சதங்கள், 4 அரைசதங்கள், அடங்கும், இவரைப்போன்ற பிற வீரர்களின் முதல் 13-14 டெஸ்ட் போட்டிகளின் ரன்விகிதங்களை விமர்சகர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அப்படி ஒப்பிடும் போது ரோஹித் சர்மா மீது இவ்வளவு கடுமை இருக்காது என்று நான் நினைக்கிறேன்.

ரோஹித் சர்மாவின் 3-ம் நிலை குறித்து...

"ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு வீரரை நாங்கள் இறக்குகிறோம் என்றால் அவர் அதில் சிறப்புற போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். புஜாரா அந்த நிலையில் தடுமாற்றத்தில் இருந்தார், அதனால் ரோஹித்தை முயற்சி செய்து வருகிறோம். சிட்னியில் அவர் நன்றாக ஆடினார் (53&39). நன்றாகத் தொடங்கினார் ஆனால் அதை பெரிய ஸ்கோராக அவர் மாற்ற முடியவில்லை. இலங்கைக்கு எதிராக 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் முக்கியமான பங்களிப்பு செய்தார்.

புஜாராவுக்கு சிறப்பாக ஆட வேண்டும் என்ற தாகம் இருக்கிறது, அதற்கான மிகச்சிறப்பான பொறுமையும் அவரது கூடுதல் பலம். இந்த பேட்டிங் வரிசைதான் அடுத்த 5-6 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக விளையாடப்போகிறது.

ஸ்ட்ரைக் ரொடேட் செய்வது என்பது அவரது பிரச்சினையாக கூறப்பட்டது, ஆனால் அதில் நாங்கள் பயிற்சி செய்து வருகிறோம். இந்தப் பிரச்சினை இவர் ஒருவருக்கு மட்டுமானது அல்ல, பேட்டிங் வரிசையில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் ஸ்ட்ரைக் ரொடேஷனின் முக்கியத்துவம் பற்றி விவாதித்து வருகிறோம்" இவ்வாறு அந்த நீண்ட பேட்டியில் ரோஹித் சர்மா, புஜாரா பற்றி பாங்கர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT