ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் வீரர்கள், ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்துவதற்காக ரூ.10 கோடியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செலவிட உள்ளது. ஒட்டுமொத்தமாக 20 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி ஐபிஎல் டி20 தொடர் தொடங்குகிறது. நவம்பர் 10-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 20-ம் தேதியிலிருந்து ஒவ்வொரு அணியாக புறப்பட்டுச் சென்றது.
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணி வீரர்கள், ஊழியர்களுக்குக் கரோனா பரிசோதனை நடத்துவதற்காக தனியாக ஒரு மருத்துவக் குழுவையை பிசிசிஐ நியமித்துள்ளது. கடந்த 20-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் அணிகள் சென்றதிலிருந்து சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளில் உள்ள வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அந்த 6 நாட்களில் முதல் நாள்,3-ம் நாள், 6-ம் நாள் கரோனா பரிசோதனை எடுக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி நடந்த நிலையில், தற்போது கூடுதலாக இரு பரிசோதனைகளைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள், மற்றும் உறுப்பினர்களுக்குக் கரோனா பரிசோதனை நடத்த இந்நாட்டைச் சேர்ந்த விபிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இந்த நிறுவனத்திலிருந்து 75 ஊழியர்கள் சுழற்சி முறையில் பிசிஆர் டெஸ்ட்டை வீரர்களுக்கு எடுத்து வருகின்றனர். ஏறக்குறைய ஐபிஎல் தொடர் வரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.
ஒரு பரிசோதனைக்கு பிசிசிஐ சார்பில் 200 திர்ஹாம் கட்டணம் செலுத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ரூ.10 கோடி கரோனா பரிசோதனைக்காக மட்டும் செலவிடுகிறோம்.
வீரர்களின் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை. வீரர்களுக்குக் கரோனா பரிசோதனை நடத்தும் மருத்துவ ஊழியர்களுக்கு தனியாக ஒரு ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் எந்தவிதத்திலும் இடர்ப்பாடுகளைச் சந்திக்க விரும்பவில்லை என்பதால், 75 மருத்துவ ஊழியர்களுக்கும் தனியாக ஒரு ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் எங்கும் செல்லாதவாறு , அவர்கள் தொற்றால் பாதிக்கப்படாதவாறு கண்காணிக்கிறோம். இதில் 25 மருத்துவ ஊழியர்கள் ஆய்வகப் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த ஹோட்டல் செலவு, பாதுகாப்பு வளையம் தொடர்பான செலவுகள் அனைத்தும் நிறுவனத்தைச் சே்ரந்தது. கடந்த மாதம் 20-ம் தேதி தேதி முதல் 28-ம் தேதிவரை 1,988 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் வீரர்கள், அணியின் ஊழியர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்” எனத் தெரிவித்தார்.