விளையாட்டு

நான் கிரிக்கெட் வீரர்களைப் பற்றி தவறாகப் பேச மாட்டேன், நான் வீரர்களை மதிக்கிறேன்: ரெய்னா விவாகரம் குறித்து என்.சீனிவாசன் பேட்டி

செய்திப்பிரிவு

13-வது ஐபிஎல்டி20 சீசன் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா கடந்தவாரம் திடீரென தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவரின் உறவினர் ஒருவர் பஞ்சாப் மாநிலம் பதான்காோட்டில் கொள்ளையர்களால் அடித்துக்கொல்லப்பட்டார். அவரின் மனைவி மகன்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதால்தான் அவர்களைக் காண்பதற்காக ரெய்னா தொடரிலிருந்து விலகினார் என கூறப்பட்டது.

ஆனால், துபாயில் சிஎஸ்கே அணியினர் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலில் பால்கனியுடன் கூடிய சூட் அறை தோனிக்கு வழங்கப்பட்டதைப் போல் தனக்கும் வழங்கப்படவில்லை என்பதால், அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலில் சுரேஷ் ரெய்னா தொடரிலிருந்து விலகினார் என்று தகவல்கள் வெளியாகின.

அதற்கு ஏற்றார்போல் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில், “ வெற்றி மமதை தலைக்குஏறி ரெய்னா இருக்கிறார். தோனியிடம் பேசினேன், எத்தனை பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டாலும் கவலைப்படத்த தேவையில்லை எனக் கூறிவிட்டார். நான் அனைத்து வீரர்களிடம் பேசிவிட்ேடன், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறேன்.

இந்த தொடர் இன்னும் தொடங்கவில்லை. ரெய்னா நிச்சயம் மிகவும் வருத்தப்படப் போகிறார், ஏனென்றால், இந்த சீசனில் அவர் விளையாடாமல் இருந்தால் ரூ.11 கோடி இழப்பைச் சந்திப்பார்” எனத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாள நிறுவனமான இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன், தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்குக் கூறும்போது, “நான் ஒன்றைத் தெளிவாகக் கூறிவிடுகிறேன். நாங்கள் வீரர்களுக்கு உரிமையாளர்கள் கிடையாது.

சிஎஸ்கே அணியின் இத்தனையாண்டுகால வெற்றிக்கு முக்கியக் காரணமே நிர்வாகம் கிரிக்கெட் விவகாரங்களில் தலையிடாமல் இருந்ததே. கிரிக்கெட் விவகாரம் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களுடையது.

சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் பெரிய தாக்கம் ஏற்படுத்திய ஒரு வீரர். அவரது பங்களிப்புகளை நான் அங்கீகரிக்கிறேன். எங்களுடன் பல ஆண்டுகள் அவர் இருந்திருக்கிறார்.

ரெய்னா இந்த ஐபிஎல் தொடரில் சொந்தக் காரணங்களுக்காக ஆடவில்லை, நான் அவரது முடிவை ஆதரிக்கிறேன். நான் ஒருபோதும் எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும் தவறாகப் பேச மாட்டேன். நான் வீரர்களை மதிக்கிறேன். நானே கிரிக்கெட்டை நேசிப்பவன் தான். இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் வீரர்களை எப்போதும் ஆதரித்து வந்துள்ளது. ஐபிஎல் வருவதற்கு முன்பே நாங்கள் வீரர்களை ஆதரித்துள்ளோம்” என்றார்.

சுரேஷ் ரெய்னாவுக்குப் பதில் யார் என்று கேட்ட போது, ‘அதை அணி நிர்வாகம் முடிவு செய்யும்’ என்றார் ரெய்னாவுக்கு பொருத்தமான மாற்று யார் என்று கேட்டதற்கு, “இப்போது நீங்கள் எம்.எஸ்.தோனி பகுதிக்குள் நுழைகிறீர்கள். அவர் முடிவெடுப்பார். நான் ஏற்கெனவே சொன்னது போல் கிரிக்கெட் விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை.

அணியில் உரசல் எதுவும் இல்லை. தோனி என்ற வலிமையான கேப்டன் இருக்கிறார், அணி அவருக்கு எப்போதுமே ஆதரவாக இருக்கும் என்று சீனிவாசன் கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியிலும் என்.சீனிவாசன், சுரேஷ் ரெய்னா பற்றி கூறும்போது, “சுரேஷ் ரெய்னா ஒரு கிரேட் பிளேயர், சிஎஸ்கே அணிக்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளார். அவர் மீது எங்களுக்கு ஏகப்பட்ட மரியாதை உள்ளது. அவர் செய்த பங்களிப்பு மீது எங்களுக்கு ஏகப்பட்ட மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. சிஎஸ்கே எப்போதும் அவருக்கு ஆதரவு அளிக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT