விளையாட்டு

தோனியினால் முன்பு போல் போட்டிகளை பினிஷ் செய்ய முடியவில்லை: ஆர்.பி.சிங் கருத்து

செய்திப்பிரிவு

தோனி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தன் சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வு பெற்றது குறித்து பல்வேறு ஹேஷ்யங்கள் உள்ள நிலையில், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், தோனி ஓய்வு பெற்றதன் காரணத்தை தன் கருத்தாக ஒன்றை முன்வைத்துள்ளார்.

உலகக்கோப்பை டி20 நடந்திருந்தால் ஒருவேளை தோனி ஆடிவிட்டு ஓய்வு பெற்றிருப்பார், அது அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டதும் தோனி ஓய்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று அபிப்ராயப்படும் ஆர்.பி.சிங், “ஆம் இதுவும் ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. டி20-யில் பெரிய வீரர் எனவே ஆடிவிட்டு ஓய்வு பெறலாம் என்று தோனி நினைத்திருக்கக் கூடும்.

ஆனாலும் வயது, உடற்தகுதி போன்ற காரணங்களும் அவரது முடிவை தீர்மானித்திருக்கலாம். ஐபிஎல் தொடரை விட்டுவிட்டால் கடந்த 12-15 மாதங்களாகவே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பேட்டிங் திறமைகளை வெளிப்படுத்த தோனிக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

2019 உலகக்கோப்பையில் அவர் 4ம் நிலையில் இறங்கி ஆடியிருக்கலாம். அணி நிர்வாகத்தினால் அவரால் அந்த டவுனில் இறங்க முடியவில்லை. அரையிறுதி ஆட்டம் வரை அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் முன்பு போல் அவரால் ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க முடியவில்லை.

இதுவும் அவருக்கு ஓய்வு பெறும் அறிகுறிகளைக் காட்டியிருக்கலாம். அதனால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்.” இவ்வாறு கூறினார் ஆர்.பி.சிங்.

SCROLL FOR NEXT