சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் ஆல்ரவுண்டருமான சுரேஷ் ரெய்னாவின் மாமா கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து திடீரென ரெய்னா விலகியதற்கு இது காரணமாக எனும்கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ரெய்னா விலகியதற்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை.
13-வது ஐபிஎல் டி20 சீசனுக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனைத்து அணிகளும் சென்றுள்ளன. வரும் 19-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட உள்ளது.
இந்தச் சூழலில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகுவதாக இன்று அறிவித்தார்.
சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் இந்தியா திரும்புகிறார். அவர், 13-வது ஐபிஎல் டி20 தொடரில் முழுமையாக விளையாடமாட்டார். இந்த நேரத்தில் சுரேஷ் ரெய்னாவுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் தேவையான அனைத்து ஆதரவையும் சிஎஸ்கே அணி முழுமையாக வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், எந்தக் காரணத்துக்காக ரெய்னா விலகினார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் சுரேஷ் ரெய்னாவின் மாமா உள்ளிட்ட குடும்பத்தார் 4 பேரைத் தாக்கி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதில் ரெய்னாவின் மாமா கொல்லப்பட்டதால், ரெய்னா உடனடியாகத் தொடரிலிருந்து விலகி இந்தியாவுக்குத் திரும்பி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் (வயது 58). இவர் அரசு ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அருகே தரியால் கிராமத்தில் அசோக் குமார் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.
கடந்த 20-ம் தேதி அசோக் குமார் உள்பட அவரின் குடும்பத்தார் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் 4 பேரையும் தாக்கிவிட்டு பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் அசோக் குமாரின் 80 வயது தாய் சத்யா தேவி, மனைவி ஆஷா தேவி, மகன்கள் அபின், கவுஷால் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
ஆனால், அசோக் குமாருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார் என்றும், அவர் ரெய்னாவின் மாமா என்றும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள சுரேஷ் ரெய்னாவுக்குத் தகவல் தெரிவி்க்கப்பட்டதால், அவர் இந்தியாவுக்கு திரும்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா வந்ததும் ரெய்னா தாரியால் கிராமத்துக்குச் செல்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பதான்கோட் காவல் கண்காணிப்பாளர் குல்நீத் சிங் குராணா கூறுகையில், “அசோக் குமாரைக் கொள்ளையர்கள் தலையில் தாக்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயத்துடன் தப்பிவிட்டனர். கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
அசோக் குமாரின் சகோதரர் கூறிய பின்பே அவர் ரெய்னாவின் மாமா எனத் தெரியவந்தது.
அசோக் குமார் வீட்டிலிருந்து ஏராளமான தங்க நகைகள், பணம் ஆகியவற்றைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
அசோக் குமார் மனைவி மட்டும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டார். மற்றவர்கள் மருத்துவமனையில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.