விளையாட்டு

கிரிக்கெட் சூதாட்டம்: 12 வீரர்கள் மீது வலுக்கும் சந்தேகங்கள்!

செய்திப்பிரிவு

கிரிக்கெட் ஊழல் புலன் விசாரணையாளர்கள் உலகம் முழுதும் 12 கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் கொண்டுள்ளனர். நியூசீலாந்து வீரர் லூ வின்செண்ட் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த 12 வீரர்கள் ஆடிய கிரிக்கெட் போட்டிகளின் மீது கண்காணிப்பு வலை விரிவு படுத்தப்படவுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து ஆஸ்ட்ரேலிய இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ள விவரம் வருமாறு:

சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மற்றும் சூதாட்டத் தரகர்கள் தங்களை அணுகியதை முறையாகத் தெரிவிக்காத வீரர்கள் என்று விசாரணையாளர்களின் வலை விரிகிறது. இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் ஒருவர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் மீதும் சந்தேகங்கள் வலுத்துள்ளது.

இது குறித்து லூ வின்செண்ட் அளித்துள்ள தகவல்களில் முக்கியமானது, வீரர்களுடன் தரகர்கள் எப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றனர். தரகர்கள் கூறியபடி நடந்து கொள்ளும் வீரர்களுக்கு பணம் எப்படி, எந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது ஆகியவை அடங்கும்.

பலகோடி ரூபாய்கள் பெறுமான சூதாட்டப் பந்தய தொழிலை நடத்தும் ஆசிய மாஃபியாக்களை அடையாளம் காணும் வங்கிக் கணக்குகள் போன்ற விவரங்களும் விசாரணையாளர்களால் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மோசமாக விளையாட ஒத்துக் கொண்ட வீரர்களுக்கு சூதாட்டக் காரர்கள் கொடுக்கும் நெருக்கடிகள் பற்றிய விவரங்களும் தெரியவந்துள்ளது. அணி விவரம், உத்திகள் என்று அனைத்து விதமான தகவல்களையும் சூதாட்டத்திற்கு ஒப்புக் கொண்ட வீரர்கள் அளிக்குமாறு நெருக்கடி கொடுக்கப்படும் விவரமும் தெரியவந்துள்ளது.

2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் லங்காஷயர் அணிக்கும் டர்ஹாம் அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டம் பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. இந்த ஆட்டத்தில் லூ வின்செண்ட் ஆடினார்.

துபாயில் செயல்படும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் சூதாட்ட ஒழிப்பு விசாரணையாளர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து போட்டிகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

சர்வதேச கேப்டன் ஒருவரை ஆட்ட நிர்ணயத்திற்காக சூதாட்டத் தரகர்கள் அணுகியதும் அவர் அதனை முறையாக தெரிவித்ததும் தெரியவந்துள்ளது. அந்த கேப்டன் நியூசீலாந்தின் பிரெண்டம் மெக்கல்லம்தானா என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு நியூசீ. கிரிக்கெட் வாரியத் தலைவர் டேவிட் ஒயிட் கருத்துக் கூற மறுத்து விட்டார்.

எப்படியும் அடுத்த 18 அல்லது 20 மாதங்கள் கழித்து கிரிக்கெட் சூதாட்டம் என்ற ஒரு புயல் கிளம்பும் என்று எதிர்பார்க்கலாம்.

SCROLL FOR NEXT