ஜம்மு காஷ்மீரில் சமூகத்தில் பின் தங்கிய பிரிவுக் குழந்தைகளிடத்தில் கிரிக்கெட் ஆர்வத்தை வளர்த்து அவர்களை கிரிக்கெட் வீரர்களாக உருவாக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டு காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங்குக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கடிதம் எழுதியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா தன் கடிதத்தில், “நான் சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகாலம் ஆடி அடையாளம் பதித்திருக்கிறேன். எனவே என்னிடம் உள்ள அறிவு திறமை ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு அளிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளில் மாணவர்களிடையே கிரிக்கெட் பயிற்சி அளிக்க விரும்புவதாக சுரேஷ் ரெய்னாஅவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
விளையாட்டு என்பது மட்டுமல்ல தொழில்பூர்வ அறம், நேர்மை கட்டுக்கோப்பு போன்றவற்றை தனிநபர்களாக அவர்கள் வளர்த்துக் கொள்வதற்கான ஒரு பயிற்சி நடைமுறையை வளர்த்தெடுக்க விரும்புகிறேன். இதன் மூலம் அவர்கள் மன, உடல் ரீதியாக ஆரோக்கியமானவர்களாக வளர முடியும்.
கிரிக்கெட்டோ எந்த ஒரு விளையாட்டோ அதன் தினசரிகளுக்கு பழக்கப்படும் குழந்தைகள், மாணவர்கள் வாழ்க்கை முறை கட்டுக்கோப்பாக மாறும். உடற்கோப்பு பற்றிய விழிப்புணர்வும் உண்டாகும். இதுதான் நம் தேசத்தின் எதிர்காலம்.
என்னுடைய மூதாதையர்கள் காஷ்மீரிகள்தான். காஷ்மீர் பண்டிட் பாரம்பரியத்தில்தான் என் வேர் இருக்கிறது. எனவே வலுவான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப், கிரிக்கெட் உணர்வு, மதிப்புகளை காஷ்மீர் குழந்தைகளிடத்தில் வளர்க்க ஆசைப்படுகிறேன், இதுதான் ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங்குக்கு என்னை இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டியது.
ஜம்மு காஷ்மீரின் கிராமப்புற மற்றும் பின் தங்கிய பிரிவுக் குழந்தைகளுக்கு கிரிக்கெட் வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறேன்.
காஷ்மீர் இளையோர்கள் பயங்கரவாதம், பயங்கரவாத வன்முறை என்ற சவாலைச் சந்தித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசம் என் கர்ம பூமி, ஜம்மு காஷ்மீரும் எனது மண் தான். அதன் மக்கள் என் சகோதர சகோதரிகள். ஜம்மு காஷ்மீரில் தொடங்கி தேசிய அளவில் இதைக் கொண்டு செல்ல பங்களிக்க என்னால் முடியும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு சுரேஷ் ரெய்னா அந்தக் கடிதத்தில் தனது பேரவாவை வெளியிட்டுள்ளார்.