விளையாட்டு

கடைசி 3 ஒவர்களில் 45 ரன்கள் தேவை... தோனியின் மனநிலையை கணிக்க முடியாது.. ஆனால் முடித்து விடுவார், எப்படி? அதுதான் தோனி - மான்ட்டி பனேசர் ஆச்சரியம்

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திரம் எம்.எஸ்.தோனி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். அவருக்கு பலதரப்புகளிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிவது இன்னும் நின்றபாடில்லை.

சில வீரர்கள் அவருடன் களத்தில் பழகியதின் ருசிகர அம்சங்களை வெளியிட வேறு சில வீரர்களோ களத்துக்கு வெளியே தோனியுடனான இனிய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் மான்ட்டி பனேசர் தன் சம்பந்தப்பட்ட ஒரு தோனி சம்பவத்திக் குறிப்பிட்டுள்ளார், இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், ஹிந்தி, பஞ்சாபி மொழியை நன்றாக தெரிந்தவர்.

இந்திய வீரர்களுக்கு களத்தில் ஒரு பெரிய சாதகம் என்னவெனில் இந்தி மொழியில் ஆலோசித்துக் கொள்வதால் எதிரணியினருக்குப் புரியாது.

அப்படிப்பட்ட ஒரு தருணத்தைத்தான் இடது கை இங்கிலாந்து ஸ்பின்னர் மான்ட்டி பனேசர் இப்போது பகிர்ந்துள்ளார், “ஸ்பின்னர்கள் வீசும் போது தோனி விக்கெட் கீப்பராக நிறைய ஆலோசனைகளை வழங்குவார். அதாவது கொஞ்சம் வைடாக வீசு, இவருக்கு நேராக வீசு, ஏய் இவர் அக்ராஸ் த லைன் ஆடுவார் போல் தெரிகிறது பந்தை நேராகப் போடு, மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடிப்பார் போல் தெரிகிறது கொஞ்சம் வைடாகப் போடு என்று தோனி ஆலோசனை வழங்குவார்.

எனக்கு இந்தி, பஞ்சாபி தெரியும், தோனிக்கு எனக்கு தெரியும் என்று தெரியாது, அதனால் நானும் தெரியாது போல் நடிப்பேன். அதாவது அவர் சொன்னது எதையும் நான் கேட்கவில்லை என்று நடிப்பேன். ஆனால் எனக்கு அவர் கூறுவது முழுக்க முழுக்கப் புரியும்.

மற்றவர்களை தோனி பிரமாதமாகக் கணிப்பார், ஆனால் அவரை யாரும் கணிக்க முடியாது. இது அவருடைய பலம். தோனி என்ன நினைக்கிறார் என்பதை நாம் வாசிக்கவே முடியாது. கடைசி 3 ஓவர்களில் ஓவருக்கு 15 ரன்கள் விகிதத்தில் அடிக்க வேண்டும் என்றால் தோனி என்ன மனதில் நினைக்கிறார் என்பதை நீங்கள் அறுதியிட முடியாது, ஆனால் அவர் முடித்துவ் விடுவார், எப்படி முடித்தார், நமக்குத் தெரியாது, அதுதான் தோனியின் ரகசியம்” என்றார் மான்ட்டி பனேசர்.

SCROLL FOR NEXT