வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அடுத்த மாதம் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் மற்றும் ஜோஷ் ஹேஸில்வுட்டுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் நவம்பர் முதல் நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. அதற்கு முன்னணி பவுலர்கள் அவசியம் என்பதால் அவர்களை மிகவும் கவனமாக கையாள்வதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது என சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தவிர வருகிற புத்தாண்டில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், அதைத் தொடர்ந்து நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. எனவே வங்கதேச தொடர் குறித்து விவாதிப்பதற்காக ஆஸ்திரேலிய தேர்வுக்குழு அடுத்த இரு வாரங்களில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியின் மேலாளர் (செயல்பாடு) பட் ஹோவர்ட், சிட்னி மார்னிங் ஹெரால்டுக்கு அளித்துள்ள பேட்டியில், “வங்கதேச தொடரில் மட்டுமல்ல, வரக்கூடிய முழு சீசனிலும் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களை எப்படி பாதுகாப்பாக கையாள்வது என்பது குறித்து தேர்வுக்குழு கூட்டத்தின்போது விவாதிக்கப்படும்.
மிட்செல் ஜான்சன், ஹேஸில்வுட் ஆகியோர் தொடர்ச்சியாக விளையாடி வருகின்றனர். அவர்கள் சீசன் முழுவதும் சிறப்பாக ஆட வேண்டுமானால் அவர்களை கவனமாக கையாள வேண்டியது அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.
ஜான்சன், ஹேஸில்வுட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படும்பட்சத்தில் வங்கதேச தொடரில் பீட்டர் சிடிலுக்கு வாய்ப்பளிக்கப்படும். வங்கதேசத்தில் உள்ள மைதானங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணியில் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெறுவார்கள். எனவே மிட்செல் ஸ்டார்க்குடன் பீட்டர் சிடில் இடம்பெறும்போது, 3-வது வேகப்பந்து வீச்சாளராக ஜேம்ஸ் பட்டின்சன் அல்லது பட் கம்மின்ஸ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
வங்கதேசம்-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 9-ம் தேதி சிட்டகாங்கில் தொடங்குகிறது. 2-வது போட்டி அக்டோபர் 17-ம் தேதி மிர்பூரில் தொடங்குகிறது.