சவுத்தாம்ப்டனில் நடைபெறும் 3வது, கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்டத்தில் தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 583 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி ஜேம்ஸ் ஆண்டர்சனின் அபாரமான ஸ்விங் பவுலிங்குக்கு 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 24 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்விக்கு அடித்தளமிட்டுள்ளது.
இங்கிலாந்து அணி 583/8 என்று டிக்ளேர் செய்த பிறகு மீதமிருந்த 11 ஓவர்களில் ஷான் மசூத் 4 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் மிடில் அண்ட் லெக் அவுட்ஸ்விங்கரில் பிளம்ப் எல்.பி.ஆகி வெளியேறி ரிவியூ ஒன்றையும் காலி செய்தார். அபிட் அலி ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கரை தொட்டார், கெட்டார், 2வது ஸ்லிப்பில் கேட்ச் ஆகி 1 ரன்னில் விழுந்தார். பாபர் ஆஸமுக்கு தொடர்ந்து அவுட் ஸ்விங்கர் வீசிய ஆண்டர்சன், ஒரு பந்தை உள்ளே கொண்டு வர எல்.பி. ஆனார். 11 ரன்களில் பாபர் ஆஸம் வெளியேறினார்.
இதையடுத்து அசார் அலி 4 ரன்களில் களத்தில் இருக்கிறார், இன்று தொடர்வார். 332/4 என்று தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி 171 ரன்களுடனும் பட்லர் 91 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆடினர். இருவரும் 359 ரன்களை கூட்டணியாக சேர்த்தனர்.
தொடங்கிய போது கிராலி திணறினார் ஒரு 35-40 பந்துகளை அவர் சந்தித்தும் அவர் 171 ரன்னிலேயே இருந்தார். 91-ல் பட்லர் அவுட் ஆகியிருப்பார், ஆனால் ஷாஹின் அஃப்ரீடியின் பந்து ஸ்டம்புக்கு மேலே செல்வதாக ஹாக் ஐ காட்டியது, தப்பினார் பட்லர். 2வது முறை 99-ல் அவர் விக்கெட் கீப்பர் கேட்சில் ஆட்டமிழந்ததாக நடுவர் தீர்ப்பளித்தார், இம்முறை முகமது அப்பாஸ் பந்து வீச்சு. உடனே பட்லர் ரிவியூ செய்தார், ஆனால் மட்டை கால்காப்பில் உரசியதாகவே காட்டியது. அதன் பிறகு இதே அப்பாஸ் பந்தை பாயிண்ட் திசையில் விரட்டி தன் 2வது டெஸ்ட் சதத்தை எடுத்தார்.
ஜாக் கிராலி, எட்ஜ் பவுண்டரி மூலம் தன் முதல் டெஸ்ட் இரட்டைச் சதத்தை எடுத்தார். அப்பாஸ் பந்தை ஸ்கொயர்லெக்கில் அடித்து 250 ரன்கள் மைல்கல்லை எட்டினார் ஜாக் கிராலி. பட்லர் ஆட்டத்தில் சில பிரச்சினைகள் இருந்தன, சுமார் 100 பந்துகள் அவர் பவுண்டரி அடிக்காமலேதான் ஆடினார். பார்ட் டைம் பவுலர்களை பாகிஸ்தான் நம்ப வேண்டிய நிலையில் ஆசாத் ஷபீக் பந்தில் ஜாக் கிராலி 267 ரன்களில் வெளியேறினார். மொத்தம் 393 பந்துகள் ஆடிய கிராலி 34 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்து ஸ்டம்ப்டு ஆனார்.
ஜோஸ் பட்லர் 311 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தார், இதில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும். இவரும் பகுதிநேர வீச்சாளரான பவாத் ஆலம் பந்தில் அவரிடமே கேட்ச் ஆகி வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ் (40), பெஸ் (30) கொஞ்சம் அதிரடி காட்டி ஸ்கோரை டிக்ளேருக்கு இட்டுச் சென்றனர். 583/8 என்று இங்கிலாந்து டிக்ளேர் செய்தது. மொத்தம் 155 ஓவர்கள் பாகிஸ்தான் களத்தில் காய்ந்தனர். ஷாஹின் அஃப்ரீடி, யாசிர் ஷா, பவாத் ஆலம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஜோஸ் பட்லர், ஜாக் கிராலியின் 359 ரன்கள் கூட்டணி இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் 6வது சிறந்த 5-ம் விக்கெட் பார்ட்னர்ஷிப் ஆகும்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி 600 விக்கெட்டுகளுக்கு இன்னும் 4 விக்கெட்டுகளே உள்ள நிலையில் இந்த இன்னிங்சிலேயே அதை முடிக்க முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.