ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்ட சிஎஸ்கே வீரர்கள் ரவிந்திர ஜடேஜா | படம் உதவி: ட்விட்டர். 
விளையாட்டு

ஐபிஎல் டி20 தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் 

பிடிஐ

13-வது சீசன் ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்பதற்காக நட்சத்திர அணிகளான ஆர்சிபி, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிரத்யேக விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் சென்று சேர்ந்தன.

இந்த மூன்று அணிகளைச் சேர்ந்த வீரர்களும் இந்தியாவிலிருந்து புறப்படும் முன், புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அந்தந்த அணிகளின் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டன.

கடுமையான மருத்துவப் பாதுகாப்பு விதிமுறைகளுடன், கட்டுப்பாடுகளுடன் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர்.

செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் 13-வது சீசன் நவம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இறங்கியவுடன் 3 அணி வீரர்களும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பயோ-பபுல் பிரிவுக்குள் வந்து பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்தக் காலகட்டத்தில் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் 3 முறை கரோனா பரிசோதனை நடத்தப்படும்.

ஏற்கெனவே கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணி வீரர்களும் வியாழக்கிழமை இரவே ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டனர். இதில் சிஎஸ்கே அணி வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் முன், சென்னையில் சிறிய பயிற்சி முகாமில் பங்கேற்று அதன்பின் சென்றனர்.

விராட் கோலி, ஆர்சிபி அணியுடன் இந்த முறை செல்லவில்லை. மாறாக மும்பையில் இருந்தவாறு தனிப்பட்ட முறையில் துபாய்க்கு நேரடியாகச் செல்கிறார். ஆர்சிபி, சிஎஸ்கே அணிகள் துபாய் நகரில் தங்குகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி அபுதாபியில் தங்குகின்றது.

ஐக்கிய அரபு அமீரகம் சென்றபின் வீரர்கள் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வருவதற்கு 6 நாட்களுக்கு அனுமதியில்லை. இந்த 6 நாட்களில் அவர்களுக்கு 3 கரோனா பரிசோதனைகள் செய்யப்படும்.

இந்தியாவிலிருந்து புறப்படும் முன்பே வீரர்களுக்குப் பலமுறை கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் தீவிரமான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 6 நாட்களில் வீரர்கள் கரோனா தொற்று இல்லாமல் இருந்தால் மட்டும் அவர்கள் பயோ-பபுல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுப் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

சன் ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியினர் நாளை ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுகின்றனர்.

ஏறக்குறைய 53 நாட்கள் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் சேர்த்து மொத்தம் 60 போட்டிகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT