தோனியும் ரெய்னாவும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று, சுதந்திர தினத்தில் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்தனர், இருவருக்கும் கிரிக்கெட் உலகம் அல்லாமல் பலதரப்பட்ட துறைகளிலிருந்தும் பிரியாவிடை வாழ்த்துக்கள் குவிந்தன.
இதில் தோனியாவது 39 வயதில் ஓய்வு அறிவித்தார், ஆனால் ரெய்னா 33 வயதில் ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சிதான். இந்நிலையில் தோனியை பாராட்டி கடிதம் எழுதிய பிரதமர் மோடி, அவரை புதிய இந்தியாவின் உத்வேகத்தின் எடுத்துக்காட்டு என்று பாராட்டினார்.
அதே போல் ரெய்னாவுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியிருக்கிறார், அதில் “கிரிக்கெட் விளையாட்டுக்காவே வாழ்ந்தீர்கள், அதையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் உங்கள் வாழ்வில் கடினமான முடிவை எடுத்துள்ளீர்கள்,அதை நான் ஓய்வு என்று சொல்லமாட்டேன்” என்று கூறி நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டியதற்கும், விளையாட்டில் இந்தியாவில் முன்னணிப்படுத்த முயன்றதற்கும் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற மோடியின் கூற்றுக்கு நன்றி தெரிவித்த ரெய்னா தன் ட்விட்டர் பக்கத்தில்,
நாங்கள் ஆடும்போது நாட்டுக்காக ரத்தத்தையும் வியர்வையையும் சிந்துகிறோம். இந்த நாட்டு மக்களின் அன்பு போல் சிறந்த பாராட்டு வேறொன்றும் இல்லை. அதிலும் பிரதமரே கூட அதை விடவும் அன்பு காட்டும்போது வேறேன்ன வேண்டும் என்ற தொனியில் பிரதமருக்கு நன்றி தெரிவித்து ’உங்கள் பாராட்டை நன்றியுடன் ஏற்று கொள்கிறேன். ஜெய் ஹிந்த்’ என்று முடித்துள்ளார்.