வியாழனன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் தொடருக்கான பயிற்சி சேப்பாக்கத்தில் நிறைவடைந்தது.
பயிற்சியில் பேட்டிங்கில் எம்.எஸ். தோனி அரக்க சிக்சர்களை அடித்தார், சில ஷாட்கள் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் கேலரியையும் தாண்டிப் போய் விழுந்தன.
இது தொடர்பாக தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ. கே.எஸ்.விஸ்வநாதன் கூறும்போது, “தோனி பந்தை நன்றாக அடிக்கிறார். மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிக்சர் மழை பொழிந்தன. தோனி வழக்கமான மனிதராக இல்லாமல் மிகவும் ரிலாக்ஸாக, தன்னம்பிக்கியுடன் மகிழ்ச்சியுடன் இருந்தார்” என்றார்.
சிஎஸ்கே அணிக்கே அவரது சர்வதேச ஓய்வு அறிவிப்பு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம்தான் தெரியவந்துள்ளது. அணி ஆச்சரியமடைந்தது.
இன்று மதியம் சிஎஸ்கே அணி யு.ஏ.இ. செல்கிறது. சென்னையில் 5 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. துபாய் சென்றவுடன் 6 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் இருக்கும்.
சிஎஸ்கே சி.இ.ஓ. மேலும் கூறும் போது, “முரளி விஜய் பந்தை நன்றாக அடிக்கிறார். ரிதுராஜ் கெய்க்வாடும் அப்படியே. அணியில் இந்த முறை நிறைய வீரர்களுக்கான தெரிவுகள் உள்ளன. அதே போல் அஸ்வின் கிரிஸ்ட் நன்றாக வீசுகிறார். வீரர்கள் சரியான மனநிலையில் உள்ளனர்” என்று சி.இ.ஓ. விஸ்வநாதன் தெரிவித்தார்.