ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
தோனிக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகளும் பிரியாவிடைகளும் குவியத் தொடங்கி இன்று வரை ஓய்ந்தபாடில்லை. அரசியல் தலைவர்கள் முதல் வர்த்தக நிறுவன அதிபர்கள், சாமானிய மனிதர்கள் வரை இந்தியாவே அவருக்கு சமூகவலைத்தளத்தில் நல்லதொரு பிரியாவிடையை அளித்து விட்டனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தோனிக்கு ஒரு நெகிழ்ச்சியான கடிதம் எழுதி தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அந்தக் கடிதத்தில் தோனி ஒரு விளையாட்டு வீரர் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இளம் தலைமுறை இந்தியர்களின் தூண்டுகோல், களத்தில் தோனியின் கூல் அணுகுமுறை, இளம் வீரர்களை அவர் ஆதரித்தது அனைத்தும் இந்திய இன்றைய இளைஞர்களின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றும், குடும்த்திற்கும் பொதுவாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவதிலும் இளைஞர்கள் பாடம் கற்று கொள்வார்கள் என்றும் பாராட்டித் தள்ளிவிட்டார்.
மேலும் ராணுவத்தினருடன் தோனி இருந்ததையும் 2007 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி என்று ஒன்று விடாமல் தோனி மீது துல்லியப் புகழாரம் சூட்டிவிட்டார் பிரதமர் மோடி.
இந்தக் கடிதத்தை தன் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த தோனி கூறியிருப்பதாவது:
கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் நாடுவது பாராட்டையே. அவர்களது கடின உழைப்பும் தியாகமும் அனைவராலும் கவனிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்பதே. உங்களது நல் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் நன்றி பிரதமர் அவர்களே.
என்று தோனி நன்றி பதிவிட்டுள்ளார்.