கோப்புப்படம் 
விளையாட்டு

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸரில் புறவழி மூலம் மீண்டும் சீன நிறுவனம் நுழைவு: பிசிசிஐக்கு இந்திய வர்த்தக கூட்டமைப்பு, பிஹார் கிரிக்கெட் அமைப்பு எதிர்ப்பு

பிடிஐ

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி நடக்கும் 13-வது சீசன் ஐபிஎல் டி20 போட்டிக்கு ஸ்பான்ஸராக, சீனாவைச் சேர்ந்த நிறுவனம் பங்குதாரராக இருக்கும் ட்ரீம்11 நிறுவனத்தை தேர்வு செய்த பிசிசிஐ அமைப்புக்கு பிஹார் கிரிக்கெட் சங்கம், அனைத்து இந்திய வர்த்தகர்கள்(சிஏஐடி) கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸருக்கு ட்ரீம்11 நிறுவனம் தொடர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2020ம் ஆண்டு 13வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கிடையே ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருந்த சீனாவின் விவோ செல்போன் நிறுவனத்தை, இந்திய - சீன எல்லை பிரச்சினை காரணமாக ஓர் ஆண்டுக்கு பிசிசிஐ ரத்து செய்தது.

இதையடுத்து புதிய டைட்டில் ஸ்பான்ஸருக்காக நேற்று நடந்த ஏலத்தில் ட்ரீம்11 எனும் நிறுவனம் ரூ222 கோடி ஏலம் எடுத்ததாகவும், இந்த ஆண்டு டைட்டில் ஸ்பான்ஸராக ட்ரீம்11 நிறுவனம் என பிசிசிஐ அறிவித்தது.

இந்திய-சீன எல்லைப் பிரச்சினை, இரு நாட்டு ராணுவத்தினர் மோதல் காரணமாகத்தான் சீனாவின் விவோ நிறுவனத்தின் டைட்டில் ஸ்பான்ஸர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் பங்கு தாரராக இருக்கும் ட்ரீம்11 நிறுவனத்துக்கு ஸ்பான்ஸர் உரிமத்தை பிசிசிஐ அளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின்(பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலிக்கு, கண்டனம் தெரிவித்து அனைத்து இந்திய வர்த்தகர்கள்(சிஏஐடி) கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் “ 13-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடருக்கு டைட்டில் ஸ்பான்ஸராக ட்ரீம்11 நிறுவனத்தைத் தேர்வு செய்தது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஏனென்றால் இந்த நிறுவனத்தி்ன் முக்கியப் பங்குதாரர் சீனாவின் டென்சென்ட் குளோபல் நிறுவனம்தான்.

ட்ரீம்11 நிறுவனத்தை டைட்டில் ஸ்பான்ஸராகத் தேர்வு செய்துள்ளது குறித்த எங்கள் கருத்தையும், கவலையையும்தான் உங்களிடம் பகிர்கிறோம். ஆனால், இந்தியாவின் நலனுக்கு எதிராகவும், இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் சீனாவுக்கு எதிராக இந்திய மக்கள் இருக்கும்போது, அவர்களின் உணர்வுகளையும், மனநிலையையும் புறந்தள்ளிவிட்டு, புறவழிமூலம் சீன நிறுவனத்துக்கே ஸ்பான்ஸர் கொடுத்துள்ளீர்கள்.” எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பிஹார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ இந்திய விளையாட்டின் நலம்விரும்பியாக, இந்த ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் வெற்றிகரமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும்.

ஆனால், ட்ரீம்11 நிறுவனம் ஐபிஎல் போட்டியில் டைட்டில் ஸ்பான்ஸராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா கருத்துக்கு விரோதமாகும், அதை தகர்க்கும் முயற்சியாகும். ஏனென்றால், ட்ரீம்11 நிறுவனம் சீனாவைச் சேர்ந்த நிறுவனம்.மேலும், ஐபிஎல் அணிகளில் ஒன்றிலும் இந்த நிறுவனம் மிகப்பெரிய முதலீட்டையும் செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT