விளையாட்டு

இந்தியாவில் தற்போது நடக்கும் ஆட்சியில் இந்தியா-பாக். தொடர் நடத்துவது நல்லதல்ல: இம்ரான் கான் திட்டவட்டம்

பிடிஐ

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இருக்கும் இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடத்துவது பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் டாக்குமென்ட்ரியில் பேசிய இம்ரான் கான், இந்தச் சூழ்நிலை இருதரப்பு கிரிக்கெட்டுக்குத் தோதானது அல்ல என்றார்.

1979 மற்றும் 1987 தொடர்களில் இந்தியாவுக்கு தான் வந்ததையும் அப்போது இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் நடத்தும் சூழ்நிலைகள் பற்றியும் இம்ரான் கான் தன் கருத்தை தெரிவித்தார்.

இம்ரான் கூறியது, “பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கும், அரசுகளும் தடைகளை நீக்குவதில் மும்முரம் காட்டினர். இதனால் களத்திலும் சூழ்நிலை பிரமாதமாக இருந்தது. 1979-ல் நல்ல கிரிக்கெட்டுக்காக இரு நாட்டு வீரர்களையும் இந்திய ரசிகர்கள் பாராட்டும் சூழ்நிலை இருந்தது.

ஆனால் 1987-ல் நான் பாகிஸ்தான் கேப்டனாக இந்தியத் தொடருக்கு வந்த போது ரசிகர்களிடம் எங்கள் மீது பெரிய அளவில் பகைமை இருந்தது. இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே பதற்றம் இருந்தது.

இந்நிலையில் இன்று இந்தியாவில் நடக்கும் ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் அரசை வைத்துப் பார்க்கும் போது இருதரப்பு தொடர்களுக்கு உகந்ததான சூழ்நிலை இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.

2005-ல் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து தொடரை வென்றது. இந்திய அணியை எங்கள் ரசிகர்கள் கொண்டாடினர்.

ஆஷஸ் தொடர் முக்கியமானதுதான், ஆனால் இந்தியா-பாகிஸ்தான் தொடருக்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஏனெனில் இதன் சூழ்நிலையே வேறு.

இன்றைய டி20 கிரிக்கெட்டில் ஆடப்படும் பலதரப்பட்ட ஷாட்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன, கடைசி 5 ஒவர்கள் மிகவும் திரில்லாக இருக்கிறது. நெருக்கமான போட்டிகள் பார்க்க சுவாரசியமானவை.

ஆனால் கிரிக்கெட்டின் கனவான் என்ற முறையில் நான் பழைய பள்ளியைச் சேர்ந்தவன். என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் நல்ல சவால் தரும் போட்டியின் அருமையான ஒரு வடிவம்” என்றார் இம்ரான் கான்.

SCROLL FOR NEXT