விளையாட்டு

வாழ்க்கைக் கிரிக்கெட்டின் கடைசி கட்டாய ஓவர்களில் இருக்கிறோம்- சவுகான் தன்னிடம் அடிக்கடி கூறியதாக கவாஸ்கர் உருக்கம்

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த தொடக்கக் கூட்டணி, கம்பீர்-சேவாகுக்கு முன்பு, கவாஸ்கர்-சவுகான் தான், எத்தனையோ முக்கியக் கூட்டணிகளை அமைத்துள்ளனர். 10 முறைக்கும் மேல் சதக்கூட்டணி அமைத்துள்ளனர். ஆனால் தன்னலமற்ற தைரிய வீரர் சேத்தன் சவுகான் ஒரு முறை கூட சதம் அடித்ததில்லை. அந்தச் சவுகான் இன்று நம்மிடையே இல்லை.

அவரைப்பற்றி கூறுவதற்கு, அவரது கிரிக்கெட்டைப் பற்றிக் கூறுவதற்கு கவாஸ்கரை விட்டால் சிறந்த சகவீரர், நண்பர், வேறு யாராக இருக்க முடியும்? சுனில் கவாஸ்கர் தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு எழுதிய பத்தியில் பல நெகிழ்ச்சியூட்டும் தருணங்களைக் குறிப்பிட்டுள்ளார், சுனில் கவாஸ்கர் பத்தியின் சுருக்கமான தமிழ் வடிவம் வருமாறு:

கடந்த 2-3 ஆண்டுகளாக நானும் சவுகானும் சந்தித்தால் அவர், வாருங்கள், வாருங்கள், நாம் வாழ்க்கையின் கடைசி கட்டாய ஓவர்களில் இருக்கிறோம்’ என்பார். சந்திப்பு எப்போதும் அவருக்கு பிடித்த பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில்தான் இருக்கும். அவர் பிட்ச் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பார். நான் அவரை கட்டிப்பிடித்து, ‘இல்லை, இல்லை நம்மிருவருக்கும் இன்னொரு சதக்கூட்டணி உள்ளது’ என்பேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே ‘அரே பாபா, நீங்கள் சதமெடுப்பவர், நான் இல்லை’ என்பார். நாம் நம் வாழ்க்கையின் கடைசி கட்டாய ஓவர்களில் இருக்கிறோம் என்ற அவரது வார்த்தை உண்மையாகி விடும் என்று எனது மோசமான துர்சொப்பனங்களில் கூட உடனடியாக நடந்து விடும் என நான் நம்பியதில்லை. அவருடைய கள்ளமற்ற சிரிப்பும் உற்சாகமான கேலி கிண்டலும் நான் அடுத்த முறை டெல்லி செல்லும் போது இருக்காது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

சதங்களைப் பற்றி கூற வேண்டுமென்றால், அவர் சதம் எடுக்க முடியாமல் போனதற்கு நான் இரண்டுமுறை காரணமாகி விட்டேன். இரண்டுமே ஆஸ்திரேலியாவில்தான், 1981 தொடரில்தான். 2வது அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் சவுகான் 97 ரன்களில் இருந்தார். நான் கொஞ்சம் மூடநம்பிக்கை கொண்டவன், டிவியில் பார்த்துக் கொண்டிருந்த என்னை சக வீரர்கள் என்னை வீரர்கள் அமர்ந்து பார்க்கும் பால்கனிக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றனர். ஓய்வறை டிவியில்தான் பார்ப்பேன் யாரேனும் மைல்கல்லை எட்டினால் உடனே பால்கனிக்கு விரைந்து வந்து கரகோஷம் செய்வேன். ஆனால் அடிலெய்டில் டெனிஸ் லில்லி பௌலிங் வீசும்போது நான் பால்கனியில் இருந்தேன். நம்ப மாட்டீர்கள், சேத்தன் சவுகான் 97-ல் லில்லி பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். என்னை ஏன் பால்கனிக்கு இட்டு வந்தீர்கள் என்று கேட்டேன், ஆனால் அது எதுவும் நடந்ததை மாற்றிவிடப்போவதில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு இதே தவறை, அசாருதீன் கான்பூரில் தன் ஹாட்ரிக் சதத்தை நெருங்கும்போது, நான் செய்யவில்லை. சதம் அடித்த பிறகு வெளியில் வந்து கரகோஷத்தில் இணைந்தேன், ஆனால் என் மீடியா நண்பர்கள் எனக்காகக் கத்தியைத் தீட்டினர், பெரிய ஸ்டோரி ஒன்றைச் செய்தனர், அதாவது நான் அசாருதீன் சாதனையின் போது இல்லை என்று எழுதினர். ஆனால் இதற்கு ஓராண்டுக்கு முன்னர் டான் பிராட்மேனின் 29 சதங்கள் சாதனையை நான் சமன் செய்த போது என்னை வாழ்த்த யாரும் இல்லை என்பதை எழுத அங்கு அப்போது யாரும் இல்லை.

சவுகான் என்னால் சதம் அடிக்க முடியாமல் போன இரண்டாம் முறை மெல்போர்னில் நான் மூளைகெட்டு ஆஸ்திரேலியர்களின் வசைகளுக்கு எதிராக வெளிநடப்பு செய்தேன், அவரையும் அழைத்தேன் அவர் தன் கவனத்தை இழந்திருப்பார், இதனால் சதத்துக்கு அருகில் வந்து ஆட்டமிழந்தார் (85)...

...மற்றவர்களுக்கு உதவும் அவரது குணம் அரசியலில் சேர்ந்த பின்பு வெளியே தெரிந்தது. கடைசி வரை கொடுப்பவராகவே இருந்தார் வாங்குபவராக சவுகான் இல்லை. அவரிடம் எப்போதும் பொல்லாத நகைச்சுவை உண்டு. கிரிக்கெட்டின் மிகவும் ஆக்ரோஷமான பவுலர்களைச் சந்திக்கும் போது அவருக்குப் பிடித்தமான பாடலான “Muskura ladle, muskura.” என்ற பாடலைப் பாடுவார். பெரிய சவால்களை எதிர்கொள்ளும் போது அவரது பதற்றங்களை இந்தப் பாடல் மூலம் தான் தணித்துக் கொள்வார்.

இப்போது என் சக வீரர், கூட்டளி இல்லை, நான் எங்கிருந்து புன்னகைப்பது (முஸ்குரா).

உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் பார்ட்னர்.

இவ்வாறு அந்தப் பத்தியில் சுனில் கவாஸ்கர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

-தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் இதழில் சுனில் கவாஸ்கர் எழுதிய கட்டுரை

தமிழில் சுருக்கமாக இரா.முத்துக்குமார்

SCROLL FOR NEXT