விளையாட்டு

யாருடன் ஒப்பிட்டாலும் எம்.எஸ்.தோனி அவர்களையெல்லாம் விட ஒரு படி மேல்:  புகழ்ச்சியின் உச்சத்தில் மைக் ஹஸ்ஸி

செய்திப்பிரிவு

தோனி ஓய்வு பெற்றார். அவர் ஆடும் போது எப்படி அவர் மட்டையிலிருந்து ரன் மழை பொழியுமோ, அதைவிடவும் பன்மடங்கு அவர் ஓய்வு பெற்ற பிறகு புகழ்மழை பெய்து வருகிறது.

மைக் ஹஸ்ஸி தோனி ஆட்டம், கேப்டன்சி பற்றி ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்கு ஒரு பெரிய பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் தோனி பற்றி கூறியதில் ஒன்று:

இந்தியா மாதிரி ஒரு இடத்தில் அதன் மீடியா, ரசிகர்கள் மத்தியில் அவர் எவ்வளவு அமைதியாக இருந்திருக்கிறார். நான் பார்த்த கேப்டன்கள் பலரும் வாய்விட்டு ஏதாவது அறிவுரைகளை வழங்குவார்கள், தங்களுக்குத் தேவையானதை வாய்விட்டு கேட்பார்கள், சில விஷயங்களின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்துவார்கள். ஆனால் எம்.எஸ்.தோனி மிகவும் அமைதியானவர்.

வீரர்களிடமிருந்து அழுத்தத்தை நீக்குவதில் அவருக்கு நிகர் அவர்தான், குறிப்பாக இளம் இந்திய வீரர்களின் அழுத்தத்தை அவர் குறைப்பார். ரிலாக்ஸாக இருங்கள் களத்தில் உங்கள் ஆட்டத்தை ஆடுங்கள், சில நாட்கள் வெல்வோம் சில நாட்கள் தோற்போம் என்று தான் தோனி கூறுவார்.

அவரின் தலைமையில் ஆடுவது வித்தியாசமான அனுபவம், ஆஸ்திரேலியாவில் நான் கண்டது இத்தகைய அணுகுமுறை அல்ல. தோனியிடம் செருக்கு கிடையாது. இந்த ஒரு குணம் அவரிடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அவரிடம் முதலிலிருந்தே இந்த அமைதியான குணம் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். அதாவது நான் ஆஸ்திரேலியாவுக்கு ஆடும் காலத்திலிருந்து சொல்கிறேன். யாருடன் ஒப்பிட்டாலும் எம்.எஸ்.தோனி அவர்களையெல்லாம் விடவும் ஒரு படிமேல். என்பதே என் உணர்வு.

சில சமயங்களில் வழக்கத்துக்கு மாறானவற்றை முயற்சி செய்வார். நாங்களெல்லாம் ஏன் இப்படிச் செய்கிறார் என்று நினைப்போம். ஆனால் அது பலனளிக்கும். உடனே நாம் என்ன மாதிரியான முன் கணிப்பிருந்தால் இப்படிச் செய்திருக்க முடியும் என்று வியப்போம்.

என்றார் மைக் ஹஸ்ஸி.

SCROLL FOR NEXT