எம்.எஸ். தோனி : கோப்புப்படம் 
விளையாட்டு

தோனியோடு சேர்ந்து 7-ம் எண் ஜெர்ஸிக்கும் விடைகொடுங்கள்? - மனம்திறந்து கோரிக்கை வைத்த தினேஷ் கார்த்திக்

பிடிஐ

மகேந்திர சிங் தோனியோடு சேர்ந்து அவர் அணிந்திருந்த 7-ம் எண் ஜெர்ஸிக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மனம் திறந்து கோரிக்கை விடுத்துள்ளாார்.

இந்திய அணிக்குள் 2004-ம் ஆண்டு தோனி இடம் பெறுவதற்கு 4 மாதங்களுக்கு முன் இடம் பெற்றவர் தினேஷ் கார்த்திக் .ஆனால், காலம் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளை வழங்குவதில்லை. தினேஷ் கார்த்திக் ஜொலிக்காத நிலையில் தோனி வெற்றிகரமான விக்கெட்கீப்பராகாகவும், கேப்டனாகவும் வலம் வந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதாக தோனி நேற்று அறிவித்தநிலையில் உருக்கமாக அவரின் உடைக்கும் விடை கொடுங்கள் என்று தினேஷ் கார்த்திக் பிசிசிஐக்கு கோரி்க்கை வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில்தோற்ற பின் தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணைத்து தினேஷ் கார்த்திக் பதிவிட்ட கருத்தில், “உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் தோனியுடன் நான் எடுத்துக்கொண்ட கடைசிப் புகைப்படம் இதுதான். இந்த பயணத்தில் ஏராளமானமிகச்சிறந்த அனுபவங்கள் உள்ளன. தோனி ஓய்வு பெற்ற நிலையில் தோனியோடு சேர்த்து அவர் அணிந்திருந்த 7-ம் எண் ஜெர்ஸிக்கும் ஒருநாள், டி20 போட்டியில் விடைக் கொடுக்கவேண்டும். உங்களின் 2-வது இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

பிசிசிஐ உயர்மட்டக்குழு உறுப்பினர் சாந்தா ரங்கசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ தோனி உண்மையில் பாராட்டுக்கு உரியவர். தோனி ஏன் ஓய்வு பெற்றார் என்று மக்கள் கேட்கும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவரின் பங்களிப்பு கேப்டனாகவும், வீரராகவும் அளப்பரியது. தோனி ஓய்வு பெற்றபின் அவர் அணிந்திருந்த ஜெர்ஸிக்கும் விடைகொடுப்பதுதான் உண்மையான மரியாதை” எனத் தெரிவித்தார்.

இதுநாள்வரை வீரர்கள் ஓய்வு பெற்றபின் அவர்கள் அணிந்திருந்த எண் கொண்ட ஜெர்ஸிக்கு பிசிசிஐ சார்பில் எந்தவிதமான ஓய்வும் அளிக்கப்பட்டதில்லை.

சச்சின் ஓய்வு பெற்றபின் அவரின் 10ம் எண் ஜெர்ஸி ஓய்வு கொடுக்கப்பட்டதாக எண்ணப்ட்ட நிலையில் இலங்கையுடானான தொடரில் சர்துல் தாக்கூர் 10 ம் எண் ஜெர்ஸியை அணிந்து களமிறங்கினார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டு அடங்கியது.

ஆனால், தோனி அணிந்திருந்த 7-ம் எண் ஜெர்ஸிக்கு விடை கொடுக்க வேண்டும் என்று மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ கூர்மையான அறிவு, கூல் குணம் கொண்ட கேப்டன் கூல் அணிந்திருந்த 7-ம் எண் ஜெர்ஸி அழிவில்லாதது. இரு உலகக் கோப்பைகளை இந்தியாவுக்கு வென்று கொடுத்து கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுகளை நிறைவேற்றியவர் தோனி. அவருக்கே உரிய ஸ்டைலில் ஓய்வு அறிவித்துள்ளார். வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT