இளம் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு வாய்ப்பு தர வேண்டிய நேரமிது என எம்எஸ் தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து மத்திய அமைச்சரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளுக்கும், எண்ணற்ற வெற்றிகளுக்கும் வழி நடத்தியவர் மகேந்திர சிங் தோனி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடவுள்ளார். இதற்கான பயிற்சி முகாமில் பங்குபெற தற்போது சென்னை வந்துள்ளார் தோனி.
இந்நிலையில், திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதோடு, "இதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. மாலை 7.29 மணியிலிருந்து நான் ஓய்வுபெறுவதாகக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். அந்தக் காணொலியில், அவர் இந்திய அணியில் ஆடிய முதல் ஆட்டத்திலிருந்து பல நினைவுகளின் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கெனவே 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். விராட் கோலி அணிக்கு தலைமையேற்ற சமயத்திலிருந்தே தோனியின் ஓய்வு குறித்துப் பல முறை ஊடகங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தோனியின் இந்த திடீர் அறிவிப்பு அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. பலர் சமூக ஊடகங்களில் இது குறித்துப் பகிர்ந்து, விவாதித்து வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான அனுராக் தாக்கூர் கூறியதாவது:
‘‘எம்எஸ் தோனி சிறந்த வீரர் மட்டுமல்ல. மிகச்சிறந்த கேப்டனுமாவார். அவர் ஒரு ஆல் ரவுண்டர். இந்திய கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பு மகத்தானது. அவரது ஓய்வு அறிவிப்பால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடையக் கூடும். சர்வதேச போட்டிகளில் அவரது ஆட்டத்தை காண முடியாமல் போகக்கூடும். ஆனால் இது இளம் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு வாய்ப்பு தர வேண்டிய நேரமிது என எண்ணுகிறேன்.’’ எனக் கூறியுள்ளார்.