கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற 2011 உலகக்கோப்பை தொடர் நாயகன் யுவராஜ் சிங் ஓய்விலிருந்து விடுபட்டு மீண்டும் வந்து ஆட வேண்டும் என்று பஞ்சாப் கிரிக்கெட் சங்க செயலர் புனீத் பாலி தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் உள்நாட்டுத் தொடரில் அவர் பஞ்சாபுக்காக மீண்டும் ஆட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார், யுவாரஜ் பதிலுக்காகக் காத்திருக்கிறார்.
“பஞ்சாப் வீரர்கள் உடற்கூறு நிபுணர்கள், பயிற்றுநர்களிடம் பயிற்சி எடுத்து வருகின்றனர். யுவராஜ் சிங் தன இவர்களுடன் பயிற்சி முயற்சியை ஆரம்பித்து வைத்தார். கடந்த 2 சீசன்களாக வீரர்கள் மற்ற மாநிலங்களுக்குச் சென்று விட்டனர். சண்டிகர், சத்திஸ்கர், இமாச்சல் என்று எங்கள் மாநில வீரர்கள் சென்று விடுகின்றனர். எனவே யுவராஜ் சிங் போன்ற ஒரு திறமையான வீரர் இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்க மீண்டும் வர வேண்டும், ஓய்விலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்புகிறோம்.
அனைத்து வடிவங்களிலும் அவர் ஆடினாலும் சரி, இல்லையென்றால் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட் மட்டும் ஆடினாலும் சரி. அவரிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அவர் வீரர்களுடன் கடினமாகப் பணியாற்றி வருகிறார்.” என்றார்.
பஞ்சாப் வீரர்களான மனன் வோரா, பாரிந்தர் ஸ்ரண் ஆகியோர் வெளிமாநிலங்களுக்குச் சென்று விட்டனர்.
ஆனால் யுவாராஜ் சிங் மீண்டும் வருவது அவ்வளவு சுலபமல்ல, ஏனெனில் அவர் அயல்நாட்டு டி20, டி20 லீகுகளில் ஆடி வருகிறார், அதற்கு பிசிசிஐ அனுமதியளித்ததே அவர் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதனால்தான்.
கடந்த ஆண்டு ஜூன் 10ம் தேதி யுவராஜ் சிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.