விளையாட்டு

11ஆண்டுகளுக்குப் பிறகு வந்து  டக் அடித்த  வேடிக்கை  ‘ஸ்டான்ஸ்’ ஃபவாத் ஆலம்: பாகிஸ்தான் திணறல்

செய்திப்பிரிவு

சவுத்தாம்ப்டனில் நடைபெறும் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்துள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டம் என்பதால் 45.4 ஓவர்கள்தான் சாத்தியமானது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளை இழந்தது.

‘ஓல்டு ஹார்ஸ்’ ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சாம் கரன், பிராட், வோக்ஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். பாபர் ஆஸம் 25 ரன்களுடனும் மொகமட் ரிஸ்வான் 4 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். தொடக்க வீரர் அபிட் அலி 60 ரன்களை அதிகபட்சமாக சேர்த்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் அசார் அலி 20 ரன்களுக்கு ஆண்டர்சனிடம் காலியானார்.

இதில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்கு கொண்டு வரப்பட்ட பவாத் ஆலம் ஸ்டான்ஸ் பார்க்க மிகவும் வேடிக்கையாக இருந்தது. சந்தர்பால் போன்ற ஒரு சிலர் இப்படி நிற்பார்கள், ஆனால் இவர் மிகவும் நேராகவே உடலை பவுலருக்குக் காட்டிக்கொண்டு நிற்கிறார், நகர்ந்து வந்து ஆடுகிறார்.

இவரது ஸ்டான்சில் இன்னொரு வேடிக்கை என்னவெனில் இரண்டு கால்களுக்கும் இடையில் 3 ஸ்டம்புகளும் தெரிவதே. 4பந்துகளே ஆடினார். கிறிஸ் வோக்ஸ் பந்தில் எல்.பி.ஆனார். அது போன்ற ஸ்டான்சில் சர்வதேச கிரிக்கெட்டில் தேறுவது கடினம். ஷாட்களே ஆடவராது என்பது அது போன்று நிற்கும் வலது கை பேட்ஸ்மென் மொஹீந்தர் அமர்நாத் கூறுவதுண்டு.

ஆனால் அமர்நாத், ஜாவேத் மியாண்டட் இரு கண்களும் பந்தைப் பார்க்குமாறு நிற்கும் ஸ்டான்ஸ் ஃபவாத் ஆலம் போல் அவ்வளவு கோரமாக இருக்காது. சந்தர்பால் அப்படி நின்றாலும் பந்து வரும்போது பார்த்தால் நார்மல் பேட்ஸ்மென் போலத்தான் இருக்கும்.

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின் வந்த பவாத் ஆலம் டக் அடித்தது அவரது தேர்வு குறித்த சர்ச்சையை அங்கு எழுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT