விளையாட்டு

மறக்க முடியுமா? லிட்டில் மாஸ்டர் சச்சினின் முதல் சதம்: சுதந்திர தினத்துக்கு முந்தைய நாளில் இங்கிலாந்து வெற்றியைத் தடுத்த ஸ்பெஷல் இன்னிங்ஸ்

இரா.முத்துக்குமார்

ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினம். பிரிட்டீஷாரின் கரங்களிலிருந்து எண்ணற்ற உயிர்த்தியாகங்களுக்குப் பிறகு இந்திய விடுதலை சாத்தியமான நாள். இதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14ம் தேதி, 1990-ம் ஆண்டு இதே இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியை சச்சின் டெண்டுல்கர் தன் முதல் சதத்தின் மூலம் ட்ரா செய்ததையும் மறக்க முடியுமா?

அன்றைய தினம் டெஸ்ட் போட்டியின் 5ம் நாள், 5ம் நாள் இங்கிலாந்து பிட்சில் சச்சின் டெண்டுல்கர் 119 நாட் அவுட், இதுதான் அவர் முதல் சதம். இதற்கு முந்தைய தொடரில் நியூஸிலாந்தில் 88 ரன்கள் எடுத்ததுதான் அவரது அதிகபட்ச ஸ்கோர், தன் முதல் டெஸ்ட் சதத்தை சுதந்திர தினத்துக்கு முதல் நாள் அதுவும் இங்கிலாந்தை வெற்றி பெற விடாமல் தடுத்த சதத்தை சச்சின் டெண்டுல்கர் எடுத்த போது அவருக்கு வயது 17.

இங்கிலாந்து அணிக்கு கிரகாம் கூச் கேப்டன், அவர் முதல் இன்னிங்சில் 116 ரன்களையும் ஆத்தர்டன் 131 ரன்களையும் எடுக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 519 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் கேப்டன் முகமது அசாருதீன் அதியற்புதமான ஒரு இன்னிங்ஸில், மறக்க முடியாத ஸ்டைலிஷ் இன்னிங்சில் 243 பந்துகளில் 21 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 179 ரன்கள் விளாச, சச்சின் டெண்டுல்கர் அவருக்கு உறுதுணையாக 68 ரன்களை எடுக்க இந்திய அணி 432 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் லாம்ப் சதத்துடன் 320/4 என்று டிக்ளேர் செய்தது.

இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 408 ரன்கள். இந்தியாவுக்கு இருந்தது 90 ஓவர்கள். டெவன் மால்கம், ஆங்கஸ் பிரேசர், கிறிஸ் லூயிஸ் ஆகிய பவுலர்களுக்கு எதிராக இந்தியா மேட்சை ட்ரா செய்தாக வேண்டும். சித்து, சாஸ்திரி வந்த வேகத்தில் வெளியேற இந்திய அணி 35/2. சஞ்சய் மஞ்சுரேக்கருக்கு இந்த டெஸ்ட் போட்டி ஒரு அருமையான போட்டி. முதல் இன்னிங்ஸில் 93 எடுத்த மஞ்சுரேக்கர், 2வது இன்னிங்ஸில் 50 ரன்கள் எடுத்தார். வெங்சர்க்காரும் (32) இவரும் ஸ்கோரை 109க்குக் கொண்டு சென்ற போது மஞ்சுரேக்கர் வெளியேறினார். அதே ஸ்கோரில் திலிப் வெங்சர்க்காரும் ஆட்டமிழக்க அசாருதீன் 11 ரன்களில் வெளியேற 127/5 என்ற நிலையில் பால்வடியும் முகத்துடன் இளம் மாஸ்டர் சச்சின் மட்டுமே கிரீசில் இருக்கிறார், அவருடன் அனுபவ கபில்தேவ் மறுபுறம்.

கபில்தேவ் 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஸ்கோர் 183 ரன்கள் இருந்த போது ஹெமிங்ஸ் பந்தில் பவுல்டு ஆன போது, இந்திய தோல்வி ஏறக்குறைய முடிவு ஆனது, ஆனால் ஒரு முனையில் லிட்டில் மாஸ்டர் சச்சின் மறு முனையில் மனோஜ் பிரபாகர். விக்கெட்டே விழவில்லை, இங்கிலாந்தை தண்ணி குடிக்க வைத்தார் சச்சின் டெண்டுல்கர்.

189 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 119 நாட் அவுட், தன் முதல் டெஸ்ட் சதத்தை ஆகஸ்ட் 14ம் தேதி சுதந்திர தினத்துக்கு முதல் நாளில் அதுவும் இங்கிலாந்தை ஜெயிக்க விடாமல் தடுத்த சதம் சச்சினின் முதல் சதம் என்பதோடு சுதந்திர சதம் என்று அழைக்கப்பட பொருத்தமானது. மனோஜ் பிரபாகர் 67 நாட் அவுட். இந்தியா 343/6, இன்னும் கொஞ்சம் ஓவர்கள் இருந்தால் ஒருவேளை சச்சின், பிரபாகர் இந்தியாவுக்கு ஒரு அரிய வெற்றியையையும் பெற்றுத் தந்திருக்கலாம்.

சச்சின் அன்று ஆடிய பிளிக், கவர் ட்ரைவ், கட், புல்ஷாட்கள், பேக்ஃபுட் ட்ரைவ் ஷாட்களை மறக்க முடியாது, நேர் ட்ரைவ்கள் சச்சின் ஸ்பெஷல். ஒரு பேக்ஃபுட் ட்ரைவ் ஷாட்டை ஆங்கஸ் பிரேசருக்கு எதிராக முன் பாதங்களைச் சற்றே தூக்கி பின்னால் சென்று பட் என்று அவர் ட்ரைவ் ஆட மிட் ஆஃபில் பந்து பவுண்டரிக்குப் பறந்ததை இன்றும் மறக்க முடியாது ஏனெனில் அதுதான் சச்சினின் முதல் சதத்தை நிறைவு செய்த ஷாட். முதல் சதம் அடித்த போது சச்சின் வயது 17 ஆண்டுகள் 112 நாட்கள். சுதந்திரதினத்துக்காக இந்திய ரசிகர்களுக்கு அளித்த சுதந்திர தின ஸ்பெஷல் சதம் ஆகும் அது. அன்று பண்டிதர்கள் முதல் சாமானியர்கள் வரை சச்சினைப் புகழத் தொடங்கியதுதான் இன்று வரை கூட சச்சின் அலை ஓயவில்லை என்றே கூற வேண்டும்.

சச்சினின் சுதந்திர தின ஸ்பெஷல் சதத்தை மறக்க முடியுமா?

SCROLL FOR NEXT