சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்து அசத்திய பிறகு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படாத கருண் நாயர் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இவர் யுஏஇ-க்கு ஐபிஎல் தொடருக்காக இவர் இணையவிருக்கிறார்.
சமீபத்தில் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது, ஆனால் ஆகஸ்ட் 8ம் தேதி இவருக்கு நெகெட்டிவ் என்று வந்ததால் மீண்டதாக தெரிவிக்கப்பட்டார்.
இவர் 2 வாரங்களுக்கு தன்னை சுயதனிமையில் வைத்திருந்தார். இவருக்கு மேலும் 3 டெஸ்ட்கள் எடுக்கப்படவுள்ளன. இந்த பரிசோதனைகளில் கரோனா இல்லாத வீரர்களே ஆகஸ்ட் 20ம் தேதி யு.ஏ.இ. விமானத்தில் ஏற முடியும்.
2018 மற்றும் 2019 ஐபிஎல் தொடர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 14 ஆட்டங்களில் ஆடியுள்ளார் கருண் நாயர். 306 ரன்களை 134.80 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.
2016 நவம்பர் முதல் 2017 மார்ச் வரை 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கருண் நாயர், 374 ரன்களை 62.33 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் அதிகபட்ச ஸ்கோர்தான் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் எடுத்த 303 நாட் அவுட் ஆகும்.
சென்னையில் அதிரடி வீரர் விரேந்திர சேவாகுக்குப் பிறகு முச்சதம் அடித்த ஒரே வீரர். இந்த 303 ரன்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 26, 0, 23, 5 என்று சொதப்பினார் உடனே அணியை விட்டு நீக்கப்பட்டார். அதன் பிறகு உள்நாட்டு கிரிக்கெட்டில் பிரமாதமாக ஆடி இந்திய அணியின் கதவுகளைத் தட்டியும் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.