இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, உலக இடது கை பழக்கமுடையோர் தினமான இன்று (ஆக.13) , இடது கை வீரர் ஃபவாத் ஆலம் விளையாடும் 11 வீரர்களில் இடம்பெற்றுள்ளார்.
பவாத் ஆலமின் இப்போதைய வயது 35. கராச்சியைச் சேர்ந்தவர் ஃபவாத் ஆலம். இதுவரை பாகிஸ்தானுக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அதில் 250 ரன்களை 1 சதத்துடன் 41.66 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
தான் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அன்னிய மண்ணில் அறிமுக டெஸ்ட்டில் சதம் அடித்த முதல் பாக். வீரர் ஆக சாதனை புரிந்தார்.
பாகிஸ்தானின் புகழ்பெற்ற உள்நாட்டு வீரர் தாரிக் ஆலமின் மகன் ஆன பவாத் ஆலம் தன் 17வது வயதில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார், பாகிஸ்தானின் அடுத்த நட்சத்திரம் என்று சிலாகிக்கப்பட்டவர்.
முதல் டெஸ்ட் போட்டியை இலங்கைக்கு எதிராக 2009ம் ஆண்டு ஆடிய பவாத் ஆலம், கடைசி டெஸ்ட் போட்டியையும் அதே ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக டுனெடின் மைதானத்தில் ஆடினார். 38 ஒருநாள் போட்டிகளிலும் 24 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார் பவாத் ஆலம்.
ஒருநாள்போட்டிகளிளும் 40.25 இவரது சராசரி, கடைசியாக 2015-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் ஆடினார். கடைசியாக டி20 போட்டியை 2010ம் ஆண்டு ஆடினார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் ஏகப்பட்ட ரன்களைக் குவித்ததையடுத்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் டெஸ்ட் ஆடும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளார் பவாத் ஆலம்.
இந்நிலையில் இன்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.
முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 156 ரன்களைக் குவித்த ஷான் மசூது, இங்கிலாந்தின் லெஜண்ட்ரி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் இன்ஸ்விங்கரில் எல்.பி. ஆகி 1 ரன்னுக்கு வெளியேறி ஏமாற்றமளித்தார்.
தற்போது அபிட் அலி 9 ரன்களுடனும் அசார் அலி 4 ரன்களுடனும் களத்தில் நிற்க பாகிஸ்தான் 1 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இல்லை.