ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடருக்கு தயாராகும் முனைப்பில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி்க்கும், சக அணி வீரர் மோனு சிங்கிற்கும் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி அடைந்த தோல்விக்குப்பின், ஓர் ஆண்டாக எந்தவிதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் விளையாடாமல் தோனி இருந்து வருகிறார்.
உலகக்கோப்பைப் போட்டிக்குப்பின் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடர், ஆஸ்திரேலியத் தொடர், இலங்கையுடனான தொடர், வங்கதேசத் தொடர் நியூஸிலாந்து பயணம் என எதிலுமே தோனி விளையாடவில்லை.
இதனால் தோனி ஓய்வு பெறப்போகிறாரா என்று கேள்வி எழுந்தது. அதற்கு ஏற்றாற்போல் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவதை வைத்தே தோனியை அணியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் தெரிவித்தனர்.
இதற்கிடையே தோனியை இந்திய அணியி்ன் ஒப்பந்த ஊதியத்திலிருந்து பிசிசிஐ நீக்கியது. ஆனாலும், மனம்தளராத சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனி, ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே சென்னையில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னையில் பயிற்சியை பாதியிலேயே முடித்துவிட்டு, ராஞ்சி புறப்பட்டார். ராஞ்சியில் உள்ளரங்கு மைதானத்தில் தீவிரமாக பயிற்சி எடுத்து வருவதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், 13-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடர், , ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்தமாதம் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதிவரை நடக்கிறது. இதற்கான அனைத்து அணிகளும் வரும் 20-க்குப்பின் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் முன்பும், அங்கு சென்றபின்பும் வீரர்களுக்கு தீவிரமான கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது, கடும் மருத்துவக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமைமுடித்துவிட்டு ஐக்கி அரபு அமீரகத்துக்கு சிஎஸ்கே அணியினர் இம்மாதம் 22-ம் தேதி புறப்படலாம் எனத் தெரிகிறது.
சென்னையில் நடக்கும் பயிற்சி முகாம் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல் பாலாஜி தலைமையில் நடக்கிறது. இந்த பயிற்சி் முகாமில் பங்கேற்க சென்னை புறப்படும் முன் தோனி ராஞ்சி நகரில் கரோனா பரிசோதனை செய்து கொண்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தோனி மட்டுமல்லாது சக வீரர் மோனுசங்கிற்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
ராஞ்சியில் உள்ள குரு நானக் மருத்துவமனைக்கு உட்பட்ட மைக்ரோப்ராக்சிஸ் லேப் தோனிக்கும், மோனு சிங்கிற்கும் கரோனா பரிசோதனை நடத்தியுள்ளது.தோனியின் பண்ணை வீட்டுக்கு நேற்று சென்ற மைக்ரோ ப்ராக்சிஸ் ஆய்வக ஊழியர்கள் தோனியிடம் மாதிரிகளைப் பெற்று வந்துள்ளனர். இவருக்கும் இன்று மாலை பரிசோதனை முடிவுகள் வரவுள்ளன. இதில் தோனிக்கும், மோனு சிங்கிற்கும் கரோனா இல்லை எனத் தெரியவந்தால், இருவரும் சென்னை புறப்படுவார்கள்.
இதற்கிடையே சிஎஸ்கே அணியினருக்கு 5 நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமில் நட்சத்திர வீரரும் ஆல்ரவுண்டருமான ரவிந்திர ஜடேஜா தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கமாட்டார் என்று கிரிக்இன்போ தளம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே வலைபயிற்சியில் பந்துவீசுவதற்காக சிஎஸ்கே அணியினருடன் தமிழக அணியைச் சேர்ந்த 8 பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் அஸ்வின் கிறிஸ்ட், கவுசிக், எம் முகம்மது, அவுசிக் ஸ்ரீனிவாஸ், எல் விக்னேஷ், அபிஷேக் தன்வார் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.