ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் செப்.19 முதல் நவ 10 வரை நடைபெறுகின்றன, இதற்காக 15 சிஎஸ்கே வீரர்கள் சென்னை வந்து பயிற்சியில் ஈடுபடவிருக்கின்றனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆகஸ்ட் 16 முதல் 20 வரை பயிற்சி நடைபெறும். இதில் ஜடேஜா சொந்தக் காரணங்களுக்காகக் கலந்து கொள்ளவில்லை.
பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நேரடியாக யுஏஇ செல்கிறார். அதே போல் வாட்சன், பிராவோ இந்தியா வராமல் நேரடியாக யுஏஇ வருவார்கள்.
இதனையடுத்து சிஎஸ்கே பவுலிங் பயிற்சியாளர் லஷ்மிபதி பாலாஜி கண்காணிப்பில் பயிற்சிகள் நடைபெறும் என்று தெரிகிறது.
இந்நிலையில் எல்.பாலாஜி கூறியதாவது:
சென்னை அணியில் சீனியர் வீரர்கள் இருப்பதால் பல மாதங்கள் கிரிக்கெட் ஆடாவிட்டாலும் மீண்டு வருவது அவ்வளவு சிரமம் இல்லை என்றே கருதுகிறோம்.
சீனியர் வீரர்கள் இருப்பது பலவீனம் அல்ல, பலமே. ஐபிஎல் போன்ற தொடர்களில் எங்களுக்கு இதுவரை அனுபவமே கைகொடுத்துள்ளது, இந்த முறையும் அதில் மாற்றமிருக்காது.
தோனியைப் பொறுத்தவரை எப்போதும் சகவீரர்களுக்கு ஆதரவு தருவார். இவரது கேப்டன் பணியில் குறுக்கு வழி என்பதெல்லாம் கிடையாது.
அவசரகதியில் முடிவுகள் எடுக்க மாட்டார், திறமையை நிரூபிக்க வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவார்.
இவ்வாறு கூறினார் எல்.பாலாஜி.