கடந்த ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்குபின் எந்தவிதமான சர்வதேச ஆட்டங்களிலும் விளையாடாமல் இருந்து வரும் மகேந்திரசிங் தோனி, 2021, 2022 ஐபிஎல்டி20 போட்டியிலும் விளையாடுவார் என்று சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த ஓர் ஆண்டாக எந்தவிதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் விளையாடாமல் இருந்து வரும் தோனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்தமாதம் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதிவரை நடக்கும் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளார்.
இதில் தோனி விளையாடுவதைப் பொறுத்தும், அவரின் ஆட்டத்திறன் அடிப்படையில்தான் அவரை இந்தியஅணிக்குள் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
உலகக்கோப்பைப் போட்டிக்குப்பின் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடர், ஆஸ்திரேலியத் தொடர், இலங்கையுடனான தொடர், வங்கதேசத் தொடர் நியூஸிலாந்து பயணம் என எதிலுமே தோனி விளையாடவில்லை.
இதனால் தோனி ஓய்வு பெறப்போகிறாரா என்று கேள்வி எழுந்தது. அதற்கு ஏற்றாற்போல் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவதை வைத்தே தோனியை அணியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் தெரிவித்தனர்.
இதற்கிடையே தோனியை இந்திய அணியி்ன் ஒப்பந்த ஊதியத்திலிருந்து பிசிசிஐ நீக்கியது. ஆனாலும், மனம்தளராத சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனி, ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே சென்னையில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் ஒரு இணையதளத்துக்குப் பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறுகையில் “ சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, இந்த ஐபிஎல் மட்டுமல்ல 2021, 2022 ஐபிஎல் டி20 தொடரிலும் விளையாடுவார் என நம்புகிறேன். ஊடகங்கள் மூலம் எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் இந்தக் கருத்தை நான் தெரிவிக்கிறேன். ஜார்க்கண்டில் உள்ளரங்கு மைதானத்தில் தோனி பயிற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எங்களுக்கு கேப்டன், பாஸ் பற்றி கவலையில்லை. தோனியைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டது இல்லை. தோனிக்கு அவரின் பொறுப்புகள் என்ன என்பது நன்கு தெரியும். ஆதலால், அவரையும், அவர் சார்ந்தி்ருக்கும் அணியையும் தோனி நன்கு பார்த்துக்கொள்வார்.
சிஎஸ்கே சார்பில் வரும் 16-ம் தேதி முதல் 20-ம் தேதிவரை சிறிய அளவிலான பயிற்சிக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதலால், வரும் 14-ம் தேதிக்குள் அனைத்து வீரர்களும் சென்னைக்கு வந்துவிடுவார்கள். 4 நாட்கள் மட்டுமே நடக்கும் இந்த பயிற்சி முடித்தபின் 21-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சிஎஸ்கே அணி புறப்பட்டுவிடும் என்று நம்புகிறேன்
இவ்வாரு காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்குப்பின் தோனி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடதநிலையில் அவர் பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், சிஎஸ்கே அணி நிர்வாகமோ தோனி 2021-ம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திலும் அணியில் தக்கவைக்கப்படுவார் என்று சிஎஸ்கே துணைத் தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் என் சீனிவாசன் ெதரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.