விளையாட்டு

மந்தீப் சிங்கை அடுத்து கரோனா பாதித்த மற்ற 5 வீரர்களும் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 60 ஆயிரத்து 963 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 834 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 60 ஆயிரத்து 963 பேர் புதிதாக கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 23லட்சத்தைக் கடந்து 23 லட்சத்து 29 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 834 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு 46 ஆயிரத்தைக் கடந்து 46 ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்திய ஹாக்கி வீரர் மந்தீப் சிங்கிற்கு கரோனா தொற்றியதையடுத்து அவர் உடல் நிலை சீராக இருந்தாலும் ஆக்சிஜன் அளவு திடீரென குறைந்ததால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மற்ற 5 வீரர்களான கேப்டன் மன்பிரீத் சிங், ஜஸ்கரன் சிங், சுரேந்தர் குமார், வருண் குமார், கோல் கீப்பர் கிருஷ்ணன் பி.பதக் ஆகிய ஹாக்கி வீரர்களும் பெங்களூருவில் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களை கவனித்துக் கொள்ள தனி மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முகாமுக்கு வந்த பிறகுதான் இவர்களுக்கு கட்டாய சோதனையில் கரோனா தெரியவந்தது, ஆகவே முகாமை தொடர்ந்து நடத்த வேண்டுமா அல்லது கலைக்க வேண்டுமா என்பது பற்றி விளையாட்டு ஆணையம் இன்னமும் முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT