ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் வாஹ் தலைமையிலிருந்து ஒரு வக்கிர ஸ்லெட்ஜிங் அணியாக வலம் வந்து அடுத்தடுத்து ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோர் கேப்டன்சியில் ஸ்லெட்ஜிங் என்பது ஏதோ அவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை என்பது போல் நினைத்து அதை செயல்படுத்தி வந்தனர்.
ஆனால் அவ்வப்போது எதிரணியினரும் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். அதில் குறிப்பாக ஆசியாவில் சொல்ல வேண்டுமென்றால் ஷோயப் அக்தர். ஆனால் அக்தரின் ஸ்லெட்ஜிங்கில் ஒரு ருசிகரம் இருக்காது, எதிரணியினரும் ரசிக்கும் படியாக இருக்க வேண்டுமே தவிர, தான் பெரிய ஆக்ரோஷன் என்பதற்காக தன் லோக்கல் மொழியில் கெட்ட கெட்ட வார்த்தைகளாகப் பயன்படுத்தி விட்டு நான் அவரை ஸ்லெட்ஜிங் செய்து விட்டேன் என்று காலரை தூக்கி விட்டுக் கொள்பவர்.
இந்நிலையில் அக்தருக்கும் தனக்கும் நடந்த ஸ்லெட்ஜிங் பரிமாற்றங்களை மேத்யூ ஹெய்டன் கிரேட் கிரிக்கெட்டர் பேட்டியில் குறிப்பிட்டார்.
“ஒரு முறை யுஏஇயில் மேட்ச். 58 டிகிரி வெயில் கொளுத்துகிறது. அக்தர் போன்ற ஒருவரை நான் எப்படி சீண்டுவேன் என்றால் ’நீ ஒரு பி-கிரேடு ஆக்டர் என்பேன், உடனே அவர் மூக்குக்கு மேல் கோபம் லேசாக அவரை எட்டிப்பார்க்கும்.
அவர் என்ன செய்வார், நாங்கள் இறங்கும் போது, ‘இன்று உன்னைக் கொன்று விடுவேன்’ என்று அவருக்கே உரிய ‘வண்ணமயமான மொழியில்’ கூறுவார். நான் உடனே நண்பா அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என்பேன்.
ஆனால் உனக்கு 18 பந்துகள் அதாவது 3 ஒவர்கள் தருகிறேன் அதற்குள் அதைச் செய்து விடு ஏனெனில் நான் எதிர்முனையில் இருப்பேன். இல்லையெனில் உன்னை பஞ்சு பஞ்சாக்கி விடுவேன் என்பேன்.
இப்படியாக அவரை சீண்டி கண்டபடி அவரை பேச வைத்து அவரை முட்டாளாக்குவேன். நடுவர் வெங்கட்ராகவனிடம் நான் எப்படி இதைச் சொல்ல முடியும்.
ஒவ்வொரு முறை ஓடி வரும்போதும் என்னை கண்டபடி திட்டிக்கொண்டே வருவார் வீசுவார், அதனால் சில சமயங்களில் அவர் ஓடி வரும்போது நான் ஸ்டம்பிலிருந்து விலகி விடுவேன். அவர் உடனே என்ன பிரச்சினை என்பார். எனக்குப் பிரச்சினை இருக்கிறது என்றேன்.
நேராக நடுவர் வெங்கட் ராகவனிடம் சென்று நான் ஆட்டத்துக்கு பங்களிப்பு செய்கிறேன், எனக்கு என்ன கிடைக்கிறதோ அதற்கு நான் தகுதியானவனே. ஆனால் அத்தனையும் ஆட்டத்தின் நாகரீக ஒழுங்குக்குட்பட்டதாக இருக்க வேண்டும், ஓடி வரும்போதெல்லாம் என்னை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்ட முடியாது என்று புகார் செய்தேன்.” இவ்வாறு கூறினார் மேத்யூ ஹெய்டன்.