விளையாட்டு

நாம் ஒன்றும் கவுன்ட்டி கிரிக்கெட் பவுலர்கள் அல்ல: பாக். தோல்விக்கு கேப்டன் அசார் அலி மீது வாசிம் அக்ரம் பாய்ச்சல்

இரா.முத்துக்குமார்

மான்செஸ்டர் தோல்விக்கு பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியின் கேப்டன்சிதான் காரணம் என்று முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சாடியுள்ளார்.

277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை 150 ரன்களுக்குள் இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது, ஆனால் கிறிஸ் வோக்ஸ், பட்லர் ஆகியோர் இணைந்து அணியை வெற்றி பெறச் செய்தனர், இருவரும் 139 ரன்களைச் சேர்க்க ஆட்டம் மாறிப்போனது, இதில் இங்கிலாந்து தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

பிட்சும் பவுலர்களுக்கு சாதகமாக இருந்த நிலையிலிருந்து மாறிவிட்டிருந்தது, யாசிர் ஷாவை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி காலி செய்தனர். கேப்டன்சியும் முயற்சிகளற்று இருந்தது என்பதில் இருவேறு கருத்தில்லை.

இந்நிலையில் வாசிம் அக்ரம் கூறும்போது, “தோல்வி நிச்சயம் பாகிஸ்தான் அணியையும் பாகிஸ்தான் ரசிகர்களையும் காயப்படுத்தியிருக்கும். வெற்றி தோல்வி கிரிக்கெட்டின் அங்கம்தான். ஆனால் கேப்டன் அசார் அலி சில விஷயங்களைக் கோட்டை விட்டார்.

வோக்ஸ் களமிறங்கும் போது பவுன்சர்கள் வீசவில்லை. ஷார்ட் பிட்ச் பந்துகளும் வீசவில்லை, வோக்ஸை நன்றாக நிலைக்கச் செய்து விட்டனர். ரன்கள் சுலபமாக வந்தன.

பாகிஸ்தான் கிரிக்கெட் என்றாலே லாவகமாக ஆடுவதுடன் கணிக்க முடியாத் தன்மையுடன், ஆக்ரோஷமாக ஆடுவது. வந்து சும்மா லைன் அண்ட் லெந்தில் வீச நாம் என்ன கவுன்ட்டி கிரிக்கெட் பவுலர்களா? நாள் முழுதும் அப்படி வீசிக் கொண்டிருக்க முடியுமா?

நசீம் ஷா, ஷாஹின் அஃப்ரீடிக்கு எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் 18-20 ஓவர்களை கேப்டன் அசார் அலி வழங்க வேண்டும் அதுதான் உத்தி” என்றார் வாசிம் அக்ரம்.

SCROLL FOR NEXT