பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் நேற்று அடித்த டக், உள்நாட்டில் 50 இன்னிங்ஸ்களில் அவர் எடுத்த முதல் பூஜ்ஜிய ஸ்கோராகும்.
பொதுவாக பந்துகள் அதிகம் ஸ்விங் ஆவதைத் தடுக்கவும், எல்.பி.டபிள்யூ ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் பேட்டிங் கிரீசிலிருந்து பேட்ஸ்மன்கள் ஒரு அடி முன்னால் நிற்பது வழக்கம்.
அப்படித்தான் பென் ஸ்டோக்ஸ் நின்றார். ஆனால் அவருக்கு பாகிஸ்தான் பவுலர் முகமது அப்பாஸ் ஒரு கனவுப்பந்தை வீசுவார் என்று அவரே கூட எதிர்பார்க்கவில்லை.
ரவுண்ட் த விக்கெட்டில் வந்த அப்பாஸ், பந்தை காற்றில் லேசாக உள்ளே கொண்டு வந்தார் பிறகு அது லேசாக லேட் ஸ்விங் ஆனது, ஆனால் இதுவே பென் ஸ்டோக்ஸ் ஸ்ட்ரோக்கை ஏமாற்ற போதுமானதாக இருந்தது.
ஸ்டோக்ஸ் மேலும் முன்னால் வந்து அந்தப் பந்தை எதிர்கொண்டார். பந்து மட்டையின் வெளிவிளிம்பைக் கடந்து ஆஃப் ஸ்டம்ப் மேல் பகுதியைப் பதம் பார்த்தது.
இன்றைய சூழலில் மிகவும் அபாயகரமான மட்டையாளரான பென்ஸ்டோக்சை டக் அவுட் செய்த அப்பாஸ் முதலில் எவ்வளவு பெரிய விக்கெட் என்று தெரியவில்லை, ஆனால் அதன் பிறகு அவர் கொண்டாடித் தீர்த்துவிட்டார்.
இந்த இங்கிலாந்து தொடரில் ஷாஹின் ஷா அஃப்ரீடியை வாசிம் அக்ரம் போலவும் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவை வக்கார் யூனிஸ் போலவும் வர்ணித்தார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான்.
முகமது அப்பாஸுக்கு இவர்கள் இருவர் போல் வேகம் இல்லை, ஆனால் அவரிடம் ஸ்விங் உண்டு. அதுதான் பென்ஸ்டோக்சை பதம் பார்த்தது. இங்கிலாந்தில் விழுந்த 4 விக்கெட்டுகளில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் அப்பாஸ்.
2018 இங்கிலாந்து தொடரில் அப்பாஸ் லார்ட்ஸில் மொத்தமாக 64 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் நினைவுகூரத்தக்கது. அப்பாஸ் இதுவரை 18 டெஸ்ட்களில் 75 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மிகபிரமாதமான பவுலிங் சராசரி: 20.76.