விளையாட்டு

கேப்டன் சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறொன்றுமறியேன்; அதனால்தான் தோனி என்னை ஆதரித்தார்: இஷாந்த் சர்மா வெளிப்படை

ஏஎன்ஐ

ஜனவரி 2016-ல் கடைசியாக ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடிய இஷாந்த் சர்மா, ஒருநாள் அணியில் இடம்பெற வேண்டும், குறிப்பாக உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்று தன் விருப்பத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

தீப்தாஸ் குப்தாவுடனான வீடியோ உரையாடலில் இஷாந்த் சர்மா கூறியதாவது:

நிச்சயமாக, உலகக்கோப்பையில் ஆட யாருக்குத்தான் பிரியம் இருக்காது. உலகக்கோப்பையை வெல்லும் அணியில் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன். அது உண்மையில் வேறொரு உணர்வாகும்.

நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடுகிறோம், இது உலகக்கோப்பைக்கு சமமானதுதான் ஆனால் நிறைய பேர் இதைப் பின் தொடர்வதில்லை.

ஆனால் ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை பெரிய அளவுக்கு பின் தொடர்ந்து கவனிக்கப்படுகிறது.

என்னுடைய முதல் 50-60 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகும் கூட தோனி ஒரு கேப்டனாக என்னை ஆதரித்தார். எனக்குப் பதிலாக வேறு ஒருவரை பார்க்கிறேன் என்று அவர் என்னிடம் ஒரு முறை கூடக் கூறியதேயில்லை.

உண்மையைக் கூற வேண்டுமெனில் 97 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பிறகும் கூட என்னால் சராசரி, ஸ்ட்ரைக் ரேட் இதையெல்லாம் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் இதைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை. நான் இதனைப் புரிந்து கொள்ளவில்லை எனும்போது நான் ஏன் இதை நம்பியிருக்க வேண்டும்? இவை வெறும் எண்கள் அவ்வளவுதான்.

இந்தியப் பிட்ச்களில் பவுலிங் போடுகிறேன் என்றால் கேப்டன் என்னிடம் 20 ஓவர்களில் 40 ரன்கள்தான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அதைச் செய்வேன், ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார்கள். எனவே என் பவுலிங் சராசரி 37 என்பது பற்றி எனக்கு கவலையில்லை.

கேப்டன் சொல்வதைக் கேட்பவன் நான், எனவேதான் தோனி என்னை ஆதரித்தார், என்றார் இஷாந்த் சர்மா.

80 ஒருநாள் போட்டிகளில் 115 விக்கெட்டுகளை 30.98 என்ற சராசரியிலும் 97 டெஸ்ட் போட்டிகளில் 297 விக்கெட்டுகளை 32.39 என்ற சராசரியிலும் எடுத்துள்ளார். ஆஸி. தொடரில் 300 விக்கெட் கிளப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.

SCROLL FOR NEXT