அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து எடுத்த 328 ரன்கள் இலக்கை அயர்லாந்து வெறித்தனமாக விரட்டி 329/3 என்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது. இதன் மூலம் தொடர் 2-1 என்று இங்கிலாந்து சார்பில் முடிந்தது.
சவுத்தாம்டனில் உள்ள ஏஜியஸ் பவுலில் நடைபெற்ற இந்த 3வது போட்டியில் அயர்லாந்து டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து முதலில் பேட் செய்து கேப்டன் இயான் மோர்கனின் அதிரடி சதம் (106), பாண்டன் (58), டிஜே வில்லே (51), டாம் கரன் (38) ஆகியோரது அதிரடிகளினால் 49.5 ஓவர்களில் 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணியில் தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங் 128 பந்துகளில் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 142 ரன்கள் எடுக்க கேப்டன் பால்பர்னி 112 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுக்க பரபரப்பான விரட்டலில் 49.5 ஒவர்களில் 329/3 என்று அபார வெற்றி பெற்றது. 2011 உலகக்கோப்பையில் இதே இலக்கை கெவினோ பிரையன் அதிரடி 50 பந்து சதத்தினால் அயர்லாந்து விரட்டி வென்றதையடுத்து இது ஒரு பெரிய விரட்டலாக அமைந்தது.
விரட்டலில் கடைசியில் கடைசியில் தொய்வு ஏற்பட்டது, ஆனால் டெக்டர் 26 பந்துகளில் 29 ரன்களையும் கெவினோ பிரையன் 1 பவுண்டரி ஒரு சிகருடன் 11 பந்துகளில் 21 ரன்களையும் சேர்க்க 5.2 ஓவர்களில் 50 ரன்களை அதிரடியாகச் சேர்த்து வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
அயர்லாந்தினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து அணி 9 ஓவர்களில் 44/3 என்று ஆனது. ஜேசன் ராய், பேர்ஸ்டோ, வின்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
பிறகு மோர்கனும் பாண்டனும் மெதுவே ரன்களைச் சேர்த்து பிறகு அதிரடியில் இறங்க 146 ரன்களை விரைவில் சேர்த்தனர்.குறிப்பாக இயான் மோர்கன் 15 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் விளாசினார். ஆனால் மோர்கன் அபாயகரமாக திகந்த வேளையில் லிட்டில் பந்தில் வெளியேறினார். பாண்டன் ஆஃப் ஸ்பின்னர் காரெத் டெலானியிடம் எல்.பி.ஆனார். மொயீன் அலி மீண்டும் பவுன்சருக்கு இரையாகி 1 ரன்னில் வெளியேறினார், இம்முறை பவுன்சர் பதம் பார்த்தது ஆல்ரவுண்டர் கேம்ஃபர். சாம்பில்லிங்ஸ் 19 ரன்களில் மிட் ஆனில் கேட்ச் ஆனார்.
ஆனால் டேவிட் வில்லே 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 52 ரன்களையும் டாம் கரண் 38 ரன்களையும் எடுக்க இங்கிலாந்து 328 ரன்களை எடுத்தது, உண்மையில் இதையும் தாண்டி ஸ்கோர் சென்றிருக்க வேண்டும், ஆனால் அயர்லாந்து மட்டுப்படுத்தியது. அயர்லாந்து அணியில் சிறப்பாக வீசிய கிரெய்க் யங் 3 விக்கெட்டுகளையும் ஜோஷ் லிட்டில் கேம்ஃபர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மகாவிரட்டல், பால்பர்னி, ஸ்டர்லிங் அபாரம்:
329 ரன்கள் இலக்கை அயர்லாந்து விரட்டும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், ஏனெனில் கடந்த 2 போட்டிகளில் அடைந்த தோல்வி அப்படி.
ஸ்விங் மருந்துக்குக் கூட இல்லாததால் டி.ஜே.வில்லே புரட்டி எடுக்கப்பட்டார், அவர் 1 விக்கெட்டுக்கு 70 ரன்கள் கொடுத்தார். டெலானியை இவர் வீழ்த்திய பிறகு ஸ்டர்லிங்குடன் கேப்டன் பால்பர்னி இணைந்தார்.
இருவரும் இங்கிலாந்துக்கு இனி விக்கெட் இல்லை என்ற ரீதியில் ஆடினர். பால் ஸ்டர்லிங் 6 முறை ஸ்டாண்ட்ஸுக்கு சிக்சர் அடித்தார், 9 பவுண்டரிகளை விளாச கேப்டன் பால்பர்னி கொஞ்சம் நிதானத்துடன் ஆடினாலும் உறுதியுடன் ஆடினார். இவர் 12 பவுண்டரிகளை அடித்தார்.
42வது ஓவரில் 214 ரன்கள் கூட்டணிக்குப் பிறகு 128 பந்துகளில் 142 ரன்கள் வெளுத்த பால் ஸ்டர்லிங் ரன் அவுட் ஆனார். அந்த விக்கெட்டுக்குப் பிறகு 8 ஓவர்களில் அயர்லாந்துகு 63 ரன்கள் தேவைப்பட்டது. ஆதில் ரஷீத் சத நாயகன் பால்பர்னியை வீழ்த்தினார். கடைசி 5 ஒவர்களில் 44 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது ஹாரி டெக்டர், கெவினோ பிரையன் இணைந்து அயர்லாந்தை வெற்றி பெறச் செய்தனர். 9 ஆண்டுகளுக்கு முன்பு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அதிர்ச்சியளித்த அயர்லாந்து அதே இலக்கில் மீண்டும் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகனாக அயர்லாந்தின் பால் ஸ்டர்லிங்கும், தொடர் நாயகனாக டேவிட் வில்லேயும் தேர்வு செய்யப்பட்டனர்.