பொதுவாக சிலருக்கு சிலருடன் ஒப்பிட்டால் மிகவும் பிடிக்கும். அந்த ஒப்பீட்டை தன் தனித்துவத்தை கவனிக்காத கருத்து என்று கூறமாட்டார்கள்.
வேறு சில வீரர்கள் ஒப்பீடு என்பதையே வெறுப்பார்கள், இவர்கள் வித்தியாசங்களை வலியுறுத்துபவர்கள்.
எந்த இரண்டையும் ஒப்பீடு செய்யும் போது தனித்துவம் என்ற கருத்தாக்கம் கேள்விக்குட்படுத்தப்படும். ஒன்றைப்போல் இன்னொன்று என்பது ஒப்பீடின் தனித்துவ மறுப்புக் கொள்கையாகும். தனிமனித நடத்தை மனநிலை, நடை உடை பாவனை, ஒரு கலாச்சாரத்தின் மனோபாவங்கள், நம்பிக்கைகள், செயல்முறைகள் ஒப்பீட்டுக்குரியதே.
ஆனால் ஒப்பீடு விரும்பாதவர்கள் நான் வேறு, இன்னொன்று வேறு என்று சுயம்/பிற என்ற இருமைவாதத்தை முன்வைப்பவர்கள். ஆனால் ஒப்பீடு என்பது ஆதிகாலம் தொட்டே இருந்து வரும் நடைமுறைதான், கோட்பாடுதான்.
இந்தப் பின்னணியில் சமீபமாக சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மாவை தோனியுடன் ஒப்பிட்டு தோனி போல் ரோஹித்தும் அமைதியானவர், அடுத்தவர் கருத்துக்கு மதிப்பு கொடுப்பவர், கேப்டனாக சக வீரர்களுக்கு, இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பவர், அதே வேளையில் ஓய்வறை சூழலுக்கு மரியாதை அளிப்பவர், தன்னை முன்னால் நிறுத்தி வழிநடத்துபவர் என்று புகழ்ந்தார்.
இது தொடர்பாக ட்விட்டரில் கேள்வி பதில் உரையாடலில் ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு ரோஹித் சர்மா பதிலளித்த போது, “ஆம் சுரேஷின் (ரெய்னா) கூறியது பற்றி நானும் கேள்விப்பட்டேன்.
தோனி ஒரு வகையைச் சேர்ந்தவர், அவர் போன்று யாரும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட ஒப்பீடுகள் செய்யக் கூடாது என்றே நான் கருதுகிறேன். என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு தனிநபரும் வித்தியாசமானவர்கள், அவரவர்க்குரிய பலங்கள், பலவீனங்களை உடையவர்கள்” என்றார்.