இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டித் தொடரின் போது சச்சினுடன் தான் பேட் செய்து கொண்டிருந்த தருணத்தில் தனக்குm அக்தருக்கும் நடந்ததாக ஒரு ஸ்லெட்ஜிங் உரையாடலை சேவாக் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துரைத்தார். ஆனால் அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்று சமீபத்தில் இதனை அக்தர் மறுத்துள்ளார்,.
ஷாரூக் கான் தொடர்புடைய பாலிவுட் விருது ஷோ ஒன்றில் இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் சிலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனக்கு அக்தருக்கும் நடந்த ஸ்லெட்ஜிங் பற்றி சேவாக் கூறுகையில், தானும் சச்சினும் ஆடிக்கொண்டிருந்த போது அக்தர் தனக்கு பவுன்சர்களை வீசி தைரியம் இருந்தால் ஹூக் ஷாட் ஆடு என்று கூறிக்கொண்டே இருந்தாராம்.
அதற்கு சேவாக், எதிர்முனையில் நிற்கிறாரே சச்சின் அவரிடம் உன் பவுன்சர் வித்தையைக் காட்டு அவர் ஹூக் ஷாட்டில் சிக்ஸ் அடிப்பார் என்று கூறினாராம் இதுதான் சேவாக் வர்ணித்த சம்பவம்.
அதாவது அப்படி சச்சினுக்கு நீங்கள் பவுன்சர் வீசி அவர் ஹூக் ஷாட்டில் சிக்ஸ் அடித்தால் நான் உங்களிடம் கூறுவேன் ‘அப்பா அப்பாதான் பையன் பையன் தான்’ என்று, என சேவாக் இந்தியில் தெரிவித்ததாக அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.
தனக்கு சேவாகுக்கும் இப்படிப்பட்ட பேச்சு நடந்ததேயில்லை என்று ஏற்கெனவே இருமுறை அக்தர் மறுத்த நிலையில் பாகிஸ்தான் செய்தி சேனலான ஏ.ஆர்.ஒய் நியூஸ் சேனலுக்கு சமீபமாக அக்தர் கூறும்போது, “அப்படி சேவாக் என்னிடம் கூறியிருந்தால் நான் சும்மா விட்டிருப்பேனா, அப்படிக் கூறியிருந்தாரேயனால் மைதானத்திலேயே அவரை அடித்திருப்பேன். விடுதியிலும் அவரை அடித்திருப்பேன். இது உண்மையல்ல கட்டுக்கதை, இட்டுக்கட்டப்பட்ட கதை” என்று அக்தர் இன்னமும் ஆவேசமாகவே இதனை எதிர்கொள்கிறார்