ஆகஸ்ட் 1ம் தேதியான இன்றைய தினத்தில்தான் 2019ம் ஆண்டு சர்ச்சைக்குரிய பால் டேம்பரிங் விவகாரத்துக்காக ஓராண்டு தடையை முடித்து ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார் ஸ்டீவ் ஸ்மித்.
மீண்டும் ஓராண்டு சென்ற பிறகு வருகிறார், அவ்வளவுதான் செல்லாக்காசாகி விடுவார் என்றெல்லாம் இங்கிலாந்து ஊடகங்கள் எழுதி அவரை வெறுப்பேற்றின. ஆனால் நடந்தது என்ன? இங்கிலாந்தை புரட்டி எடுத்து நம்ப முடியாத இன்னிங்ஸ்களை ஆடி சதங்களை எடுத்து ஆஸ்திரேலியவை தனிநபராக வெற்றி பெறச் செய்தார் என்றால் மிகையாகாது.
பர்மிங்ஹாமில் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 17/2 என்று தடுமாறிய போது இறங்கினார் ஸ்டீவ் ஸ்மித், தடைக்குப் பிறகு முதல் டெஸ்ட், ஏகப்பட்ட அழுத்தம். பிராட், வோக்ஸ் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா 122/8, ஸ்மித்தை மட்டும் அவுட் ஆக்க முடியவில்லை.
அப்போது முன்னாள் கேப்டன் அல்லவா? ஸ்டீவ் ஸ்மித், பீட்டர் சிடிலை ஊக்குவித்து ஒருமுனையைத் தாக்குப் பிடி என்றார், அவரும் 44 ரன்கள் சேர்க்க இருவரும் 9வது விக்கெட்டுக்காக 88 ரன்களைச் சேர்த்தனர். பிறகு நேதன் லயன் (12) ஒருமுனையில் தாக்குப் பிடிக்க ஸ்டீவ் ஸ்மித் ஆக்ரோஷமாக ஆடத்தொடங்கினார். மேலும் 74 ரன்களை 10வது விக்கெட்டுக்காகச் சேர்க்க ஆஸ்திரேலியா ஸ்கோர் 284 ஆக உயர்ந்தது. ஸ்டீவ் ஸ்மித் 219 பந்துகளில் 144 ரன்களை 16 பவுண்டரிகல் 2 சிக்சர்களுடன் அடித்து அவுட் ஆகவில்லை, அவுட் ஆக்க முடியவில்லை. மிகப்பெரிய இன்னிங்ஸ்!
இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் ரோரி பர்ன்ஸ் (133) சதத்துடனும் கேப்டன் ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அரைசதங்களுடனும் 374 ரன்கள் எடுத்து 90 ரன்கள் என்ற ஆரோக்கியமான முன்னிலையைப் பெற்றது.
இரண்டாவது இன்னிங்சில் ஆஸி. இறங்கி 27/2 என்ற நிலையில் மீண்டும் நெருக்கடியில் இறங்கினார் ஸ்மித். 90 ரன்கள் முன்னிலையை எடுப்பதற்குள் 75/3 என்று ஆனது ஆஸ்திரேலியா. ட்ராவிஸ் ஹெட் (51) உடன் இனைந்து 130 ரன்களைச் சேர்த்த ஸ்மித், மேத்யூ வேடுடன் இணைந்து மேலும் 126 ரன்களைச் சேர்த்தார். அதாவது இரண்டாவது இன்னிங்சிலும் ஸ்மித் 142 ரன்களை விளாசினார், ஆனால் இம்முறை வோக்சிடம் ஆட்டமிழந்தார். வேட் 110 ரன்களை எடுக்க பெய்ன், பேட்டின்சன், பாட் கமின்ஸ் பங்களிபு செய்ய 487/7 என்று ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 398 ரன்கள். நேதன் லயன் 6 விக்கெட்டுகளைச் சாய்க்க, கமின்ஸ் 4 விக். வீழ்த்த இங்கிலாந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வியை சந்தித்தது. இப்படியாக தடைக்குப் பிறகு மீண்டும் திரும்பி தடையில்லா இரண்டு சதங்களை எடுத்து அசத்தினார் ஸ்டீவ் ஸ்மித், இந்த இரண்டு சதங்களையும் மறக்க முடியாது.