விளையாட்டு

நீல் வாக்னர் போல் பவுன்சர்கள் வீச இந்திய அணியில் ஆளில்லை: ஆஸி. அணியின் மேத்யூ வேட் கருத்து

செய்திப்பிரிவு

இந்திய அணியில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் இருந்தாலும் நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் போல் பவுன்சர்களை வீச இந்திய அணியில் ஆளில்லை என்று ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் நியூஸிலாந்து ஆஸி.யிடம் ஒயிட்வாஷ் தோல்வி அடைந்தது, ஆனால் நீல் வாக்னர் என்ற இடது கை பவுன்சர் ஸ்பெஷலிஸ்ட் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷேன் ஆகிய மூவரையும் அடிக்கடி பவுன்சரில் காலி செய்தார்.

இந்நிலையில் வரவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான ஆஸி. தொடர் பற்றி மேத்யூ வேட் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் , “இப்போதைக்கு நீல் வாக்னர் பவுன்சர்களை வீசித் தாக்குவது போல் உலகில் வேறு பவுலர்கள் இல்லை. அவரது பந்துகளில் ரன் எடுப்பதும் கடினம் அவர் விக்கெட்டுகளையும் வீழ்த்துவார்.

இந்திய பவுலர்களிடம் லேசாக எதிர்பார்க்கலாம் ஆனால் வாக்னர் போல் துல்லியமாக இருக்காது. துல்லியமாக பவுன்சர்களை வீசும் ஒரு பவுலரை நான் வாக்னருக்குப் பிறகு எதிர்கொண்டதில்லை.

இந்தியத் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம், இதனை பலரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நிச்சயம் இந்தியாவை வீழ்த்துவது கடினமே. அவர்கள் ஆக்ரோஷமான அணி.

அதுவும் விராட் கோலி தலைமையில் களத்தில் அவர் வெளிப்படுத்தும் முனைப்பு அனைவரையுமே தூண்டுவதாக இருக்கும். அவர் முதுகில் இந்திய வீரர்கள் ஏறிப் பயணிப்பார்கள். எனவே நிச்சயம் இந்த முறையும் இந்தியத் தொடர் மிகக்கடினமே” என்றார் மேத்யூ வேட்.

SCROLL FOR NEXT