விளையாட்டு

ராகுல் திராவிட் கேப்டன்சி பற்றியும்தான் யாரும் பேசுவதில்லை- தோனி கேப்டன்சி பற்றிய கேள்விக்கு இர்பான் பதான் பளிச்

செய்திப்பிரிவு

27 வயதில் கிரிக்கெட்டில் ஒரு வீரர் தன் உச்சத்துக்கு செல்லும் நேரமாகும் ஆனால் அந்த வயதில் மிகப்பெரிய ஆல்ரவுண்டராக உருவாகிக் கொண்டிருந்த இர்பான் பதானின் கிரிக்கெட் வாழ்வு முடிவடைந்தது.

27 வயதில் 300 சர்வதேச விக்கெட்டுகளை எல்லா வடிவங்களிலும் சேர்த்து எடுத்த ஒரு வீரர் அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் தேர்வு செய்யப்படாமல் ஓரங்கட்டப்பட்டதால் இழப்பு இந்திய அணிக்குத்தான் என்று பலரும் இந்திய அணித் தேர்வுக்குழுவையும் அப்போதைய கேப்டனையும் விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிரிக்கெட் டாட் காம் இணையதளத்துக்கு இர்பான் பதான் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

எனக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை. என்னை ஆதரிக்கவில்லை என்பது தெளிவானது. நான் ஆடிய கடைசி போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். டி20-யில் ஆட்ட நாயகன் ஆனேன், ஒருநாள் போட்டிகளில் ரன்கள் எடுத்தேன். பிறகு காயமடைந்தேன் அவ்வளவுதான், யாரும் கண்டுகொள்ளவில்லை, அணிக்குள் திரும்பி வருவதற்கான ரோட் மேப் எனக்கு கிடைக்கவில்லை. நிச்சயமாக இந்த நிலையில் தனக்கு நன்மை செய்யப்படவில்லை என்று உணரவே செய்வார்கள் என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்த இர்பான் பத்தான், தோனியின் கேப்டன்சியை நீங்கள் ஆதரிக்கவில்லை என்று பலரும் உணர்கின்றனரே என்று கேட்க,

அதற்கு இர்பான் பதான், “ராகுல் திராவிட் கேப்டன்சி பற்றி யாராவது பேசியிருக்கிறார்களா? பேசவில்லை. ராகுல் திராவிட் பற்றி மக்கள் பேசவில்லை என்பதற்காக அவரைப் பிடிக்கவில்லை என்று அர்த்தமா?

ராகுல் திராவிட் கேப்டன்சியில்தான் இந்திய அணி 16 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக இலக்கை விரட்டும்போது வென்று சாதனை படைத்தது. சில வேளைகளில் இது மறைக்கப்படும்.

ஆனால் வெற்றி கேப்டனாக, ஒரு நல்ல அணி அமைந்தவராக, ஆட்டத்தின் வெற்றியை நோக்கிய நகர்வில் தோனி நல்ல கேப்டன்.

கங்குலி கேப்டன்சி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. ராகுல் திராவிட் கேப்டன்சி மீது, கும்ப்ளே கேப்டன்சி மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. ஆனால் கவுதம் கம்பீர் இந்திய அணிக்கு கேப்டனாக கொஞ்சம் கூடுதல் காலம் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

அவர் உண்மையில் நல்ல ஒரு கேப்டன். நான் விராட் கோலியை பாராட்டுகிறேன், ரோஹித் சர்மாவைப் பாராட்டுகிறேன். ஆனால் அதற்காக நான் தோனியின் கேப்டன்சி திறமையைப் பாராட்டவில்லை என்று அர்த்தமாகாது. கங்குலிக்கு ஒரே ஒரு கவனம் தான் இந்திய அணி வளர வேண்டும் என்பதே அது, வேறொன்றும் அவர் கவனமாக இல்லை” என்று கூறினார் இர்பான் பதான்.

SCROLL FOR NEXT