ஜப்பான் சூப்பர் சீரிஸ் பாட்மிண் டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப் காலிறுதிக்கு முன்னேறி யுள்ளார். அதேநேரத்தில் இந்தியாவின் சாய்னா நெவால், காந்த் ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளி யேறினர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் காமன்வெல்த் சாம்பியனான காஷ்யப் 21-11, 21-19 என்ற நேர் செட்களில் உலகின் 4-ம் நிலை வீரரும், சகநாட்டவருமான காந்தை தோற்கடித்தார்.
45 நிமிடங்களில் இந்த ஆட்டத்தை முடித்த காஷ்யப், தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் சீன தைபேவின் சவ் டியென் சென்னை சந்திக்கிறார். சர்வதேச தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் காஷ்யப், டியெனுடன் 3 முறை மோதி 2 முறை வெற்றி கண்டுள்ளார்.
மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால் 13-21, 16-21 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீராங்கனை மினாட்சு மிடானியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். மிடானி தனது முதல் சுற்றில் மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்துவை தோற்கடித்தது குறிப்பிடத் தக்கது.
இதேபோல் இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் 9-21, 16-21 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் லீ டாங் குயெனிடம் தோல்வி கண்டார். தற்போதைய நிலையில் ஜப்பான் ஓபனில் காஷ்யப்பை தவிர எஞ்சிய அனைத்து இந்திய வீரர், வீராங்கனைகளும் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது குறிப்பிடத் தக்கது.